Asianet News TamilAsianet News Tamil

ஊரடங்கு கட்டுபாடு விதிமீறல்.. 50 லட்சம் பேருக்கு அபராதம்..ஒரே ஆண்டில் இவ்வளவு கோடி ரூபாய் வசூலா..?

தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக 50 லட்சம் பேரிடம் இருந்து ஒரே ஆண்டில் 105 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 
 

Corona lockdown fine
Author
Tamilnádu, First Published Jan 2, 2022, 5:03 PM IST

தமிழகத்தில் இதுவரை ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ள நிலையில், புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்திருக்கிறது. 1 முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர 10ஆம் தேதி வரை தடை, உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றில் மீண்டும் 50% நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், ஒரு பெருந்தொற்றுக்கு எதிரான போரில் அரசின் முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களா? கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறார்களா என்றதொரு கேள்வி எழுந்திருக்கிறது.

ஏனென்றால், கடந்த ஓராண்டில் மட்டும் கொரோனா விதிகளை கடைப்பிடிக்காத 50 லட்சம் பேரிடம் இருந்து 105 கோடி ரூபாய் அபராத வசூலிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. விதிகளை கடைப்பிடிக்காவிடில் மீண்டும் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்.கூறுகிறார். கிண்டி அரசு கொரோனா மருத்துவமனையில் மட்டுமே 300 பேர், ராஜிவ் காந்தி மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனைகளில் தலா 120 பேர் என 550 க்கும் மேற்பட்டோர் கொரோனாவுடனும், அறிகுறிகளுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ அவசரநிலையை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பொதுமக்களுக்கே உண்டு என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.கொரோனா பரவல் அதிகமானால் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும் சூழல் உள்ள நிலையில், மக்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே மருத்துவத்துறையினரின் வேண்டுகோளாக உள்ளது.

இதற்கிடையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,489 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே வாரத்தில் தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை 597இல் இருந்து 1489 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் ஒரேநாளில் 682 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி தொற்று எண்ணிக்கையான 125ஐ விட சுமார் 5 மடங்கு அதிகம். தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 25ஆம் தேதி 12 ஆயிரமாக இருந்த பரிசோதனைகள் தற்போது 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios