செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கூட்டுறவு வங்கிகளில் மாற்றவோ, டெபாசிட் செய்ய முடியாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள், சிறு வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதை தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பணப்புழக்கமும் அதிவேகத்தில் குறைந்து உள்ளது.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக, தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காகவும் கடந்த 10ம் தேதி முதல் வங்கிகளில் தவமாய் தவமிருக்கிறார்கள். இதில் கிராமப்புற மக்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் பல்வேறு வங்கிகளில் பழைய ரூபாய நோட்டுகளை ரூ.4.500 வரை மாற்றி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. அதேபோல், அனைத்து ஏடிஎம் மையங்களிலும், ரூ.2500 வரை எடுத்து கொள்ளலாம் எனவும் கூறியது. சிறு வணிகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் 24ம் தேதி வரை தங்கள் கணக்கில் இருந்து வாரம் ஒன்றுக்கு ரூ.24 ஆயிரம் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால், இங்கு ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றவோ, இந்த நோட்டுகளை டெபாசிட் செய்யவோ முடியாது எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இதனால் விவசாயிகளும், சிறு வியாபாரிகளும் கடும் வேதனை அடைந்துள்ளனர். அவர்களிடம் உள்ள பணத்தை வங்கியிலும் மாற்ற முடியாமல், கூட்டுறவு வங்கியிலும் டெபாசிட் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
