சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை வழங்கி மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை வழங்கி மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் கோகுல்ராஜ். பொறியியல் பட்டதாரியான இந்த இளைஞர், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி பள்ளிபாளையம் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்துகிடந்துள்ளார். பட்டியலினத்தைச் சேர்ந்தவரான கோகுல்ராஜ், காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்ற முடிவுக்கு போலீஸார் வந்தனர். ஆனால், இந்த வழக்கில் கோகுல்ராஜுடன் சென்ற இளம்பெண் கொடுத்த புகாரின் காரணமாக சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜ் மற்றும் தங்கதுரை, அருள் செந்தில், செல்வக்குமார், சிவக்குமார், அருண், சங்கர் உள்பட 17 பேரை நாமக்கல் போலீஸார் கைது செய்தனர். இதனிடையே இந்த வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார்.

யுவராஜை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார். இந்த வழக்கில் மொத்தம் 106 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தன. அதில் முக்கியமான சாட்சி, கோகுல்ராஜின் தோழி திடீரென பிறழ் சாட்சியானார். இதேபோல் பல அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி, வழக்கின் போக்கையே மாற்றின. நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் தனக்கு நியாயம் கிடைக்காது என கோகுல்ராஜின் தாய் மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. தன் மகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் பவானியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் விசாரிக்க வேண்டும் எனக் கோரினார். இதையடுத்து, கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட ப.பா.மோகன், இறுதிவரையில் போராடினார். முடிவில், யுவராஜ் உள்பட பத்து பேர் குற்றவாளிகள் எனவும் இவர்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் மார்ச். 8 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், 106 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

பலர் பிறழ் சாட்சிகளாக மாறினாலும் இந்த வழக்கில் சிசிடிவி முக்கிய சாட்சியமாக இருந்தது. வழக்கின் விசாரணை முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து, கோகுல்ராஜ் கொலை வழக்கில் கடந்த 5 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இன்று தண்டனை குறித்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கோகுல்ராஜ் கொலை வழக்கில், தண்டனை விவரங்களை மதுரை சிறப்புநீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் அறிவித்துள்ளார். அதன்படி, வழக்கின் முதலாவது குற்றவாளி யுவராஜுக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. யுவராஜின் ஓட்டுநர் அருணுக்கு 3 ஆயுள், சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குமார், சதிஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரபு, கிரிதர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டோடு ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
