contract workers 527 arrested for tried to block nlc headquarters

கடலூர்

மாதத்தில் 26 நாள்கள் வேலை வழங்கக் கோரி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்பட ஒப்பந்த தொழிலாளர்கள் 527 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சுரங்கம் 1–ஏ பகுதியில் வேலைப் பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நாள்களை மாதத்தில் 26–ல் இருந்து 19 நாட்களாக என்.எல்.சி. நிர்வாகம் குறைத்தது.

இதனைக் கண்டித்தும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மீண்டும் 26 நாட்கள் பணி வழங்க கோரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த 12–ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக புதுச்சேரியில் உள்ள உதவி தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் அதிகாரி கணேசன் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனையொட்டி ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் என்.எல்.சி. தலைமை அலுவலகத்தில் வேலைநிறுத்த அறிவிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் 26 நாட்கள் வேலை வழங்கக்கோரி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக அனைத்து ஒப்பந்த தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்தனர்.

அதன்படி நேற்று காலை நெய்வேலி ஸ்டோர் சாலை பகுதியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு, அங்கிருந்து என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர்.

இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சிந்தனைசெல்வன், கடலூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தாமரைச்செல்வன், மாவட்ட செயலாளர் கருப்பசாமி, தொ.மு.ச. நிரந்த தொழிலாளர் சங்க தலைவர் வீரராமசந்திரன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ஆறுமுகம், நெய்வேலி தி.மு.க. பொறுப்பு குழு நிர்வாகி பக்கிரிசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, சி.ஐ.டி.யு. ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகி சக்ரபாணி,

தொ.மு.ச. ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பழனிவேல், ஸ்டாலின், ஹென்றி, அண்ணா ஊழியர் ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகி ரகுராமன், ராஜபாண்டி, ரங்கராமனுஜம், டி.எம்.எஸ். விக்னேஷ்வரன், எல்.எல்.எப். சவுந்தர், பாட்டாளி ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகி முருகவேல், குப்புசாமி,

தொழிலாளர் வாழ்வுரிமை சங்க நிர்வாகி அன்பழகன், தேவராஜ், முருகவேல், ஐயப்பன், திருநாவுக்கரசு, என்.எல்.சி. நிர்வாகத்தினருக்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு நல சங்க நிர்வாகிகள் ராயப்பன், பரமசிவம், பூவராகவன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி, இன்பத்துரை, மாநில நிர்வாகி அறிவழகன்,

விடுதலை தமிழ்புலிகள் மாநில துணை பொதுச்செயலாளர் ஆதவன், மாவட்ட செயலாளர் சண்முகம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சேகர், அந்தோணி செல்வராஜ், சிவமணி மற்றும் மனித நேய ஜனநாயக கட்சியினர் உள்பட பலருடன் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

இந்த ஊர்வலம் நெய்வேலி நேரு சிலை அருகே சென்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையிலான காவலாளர்கள் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் காவலாளர்களை மீறி அவர்கள் என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

இதனையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்பட 527 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

இதனிடையே அனைத்து ஒப்பந்த தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர், கோரிக்கையை வலியுறுத்தி இன்று (செவ்வாய்கிழமை) என்.எல்.சி. சுரங்க அலுவவகத்திலும், நாளை (புதன்கிழமை) நிலை எடுப்பு அலுவலகத்திலும், நாளை மறுநாள் ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளிப்பது என முடிவு செய்துள்ளனர்.

மேலும் இதிலும் சுமூக தீர்வு ஏற்படாவிட்டால் வருகிற 28–ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தி அடுத்தக்கட்டப் போராட்டம் குறித்து முடிவு செய்ய தீர்மானித்துள்ளனர்.