காங்கிரஸ் ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி , மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் , செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அலங்காநல்லூர் தற்போது போராட்ட களமாக மாறியுள்ளது. மக்களை ஏமாற்றும் அரசியல் கட்சிகள் குறித்து மக்கள் தெரிந்து கொள்வார்கள். ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமானவர்களை திமுக கண்டிக்காதது ஏன் ? காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோது தான் இந்த தவறு நடந்தது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய வேலைகளை செய்யாமல் போராட்டம் நடத்துவதால் என்ன பயனும் இல்லை.

தமிழ் மக்கள் கோரிக்கை விடுவது போராட்டம் அல்ல. அரசியல் கட்சிகள் வர வேண்டிய இடம் அலங்காநல்லூர் அல்ல. டெல்லியில் தான் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் நடந்த்து என்ன?, நீதிமன்றத்தில் செய்தது என்ன என்பது குறித்து மக்கள் கேள்வி கேட்பார்கள் என நான் நம்புகிறேன்.

காங்கிரஸ் ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தது. இதற்கு காங்கிரஸ், மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துவது என்பது தான் அனைவரின் விருப்பம். இது தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. விரைவில் நல்ல தீர்ப்பு வரும்

இவ்வாறு அவர் கூறினார்.