- Home
- Politics
- ஏரியா பிரித்து தூய்மை பணியார்கள் ஒப்பந்தத்தில் கமிஷன்..?! முக்கிய அதிகாரியின் வீட்டை முற்றுகையிட்ட சீக்ரெட் பின்னணி..!
ஏரியா பிரித்து தூய்மை பணியார்கள் ஒப்பந்தத்தில் கமிஷன்..?! முக்கிய அதிகாரியின் வீட்டை முற்றுகையிட்ட சீக்ரெட் பின்னணி..!
சமூகத்திற்காக பாடுபடும் தூய்மை தொழிலாளர்களுக்காக நீதி கேட்க, ஒன்றுபட்டு குரல் கொடுக்க, இந்த சமூகம் தயாரற்ற நிலையில் இருப்பதே ஆட்சியாளர்களின் ப்ளஸ் பாயிண்ட்.

சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6-வது மண்டலங்களில் ராயபுரம், திரு.வி.க.நகர் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 2025 ஆகஸ்ட் முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பணி நிரந்தரம், தனியார்மயத்தை கைவிடுதல், ஊதிய உயர்வு, பாக்கி ஊதியம் வழங்குதல் போன்றவற்றை முன் வைத்து 150 நாட்களைக் கடந்து போராட்டம் தொடர்கிறது. ரிப்பன் மாளிகை முன்பு தர்ணா, கூவம் ஆற்றில் இறங்கி போராட்டம், அண்ணா அறிவாலயம் முற்றுகை, கலைஞர் நினைவிடம் போராட்டம், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வீடு முற்றுகை என பலகட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன. அமைச்சர் சேகர்பாபு தங்களுக்கு எதிராக திட்டம் தீட்டி வருகிறார். தனியார்மயமாக்கி அவரது உறவினர், நண்பர் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்து கொடுத்து தங்களது வாழ்வாதாரத்தை முடக்குகிறார் என என குற்றம்சாட்டுகின்றனர். சேகர் பாபு எங்கள் வேலையை பறித்துவிட்டார். ஜாதி பார்க்கிறார்" என குமுறுகின்றனர்.
தனியார்மய முடிவை செயல்படுத்தியதில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜே.குமரகுருபரன் முக்கியமானவர் என தூய்மை பணியாளர்கள் கொதிக்கின்றனர்.
தூய்மை பணியாளர்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன் தூய்மைப் பணியாளர்கள் குமரகுருபரன் வீட்டை முற்றுகையிட முயன்றனர். எத்தனையோ தரப்பினர் போராட்டங்களை நடத்தி வந்தாலும் ஒரு அதிகாரியின் வீட்டை முற்றுகையிட்டு இதுவரை போராட்டம் நடந்ததே இல்லை. அதற்கு காரணம் ஆணையர் குமரகுருபரன், சேகர்பாபுவுடன் சேர்ந்து தங்களுக்கு எதிராக திட்டம் தீட்டியதில் மையப்புள்ளியே அவர்தான் என பகீர் கிளப்புகிறார்கள். தூய்மை பணியாளர்கள் ஒப்பந்தத்தில் மட்டுமல்ல, குமரகுருபரனின் மனைவி இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் செக்யூரிட்டி ஒப்பந்தத்தையும் எடுத்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையில் ஆணையராக இருந்த குமரகுருபரனை சென்னை பெருநகராட்சி ஆணையராக கொண்டு வந்ததே சேகர்பாபு தான். சென்னை பெருநகராட்சி நிர்வாகத்தை ஆண்டு கொண்டிருப்பதே சேகர் பாபுதான். குமரகுருபரனும், சேகர் பாபுவும் கைகோர்த்து பல விஷயங்களை செய்து வருகின்றனர். அந்த நெருக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் செக்யூரிட்டி ஒப்பந்தத்தையும் குமரகுருபரன் தனது மனைவி மூலம் செயல்படுத்தி வருகிறார்’’ என்கிறார்கள்.
இதுகுறித்து தூய்மைப்பணியாளர்கள் கூறுகையில், ‘‘ஆண்டுக்கணக்கில் போராடி வருகிறோம். எங்கள் குரலுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. தனியார் நிறுவனம் பெயரில் தூய்மை பணியாளர்களை ஒப்பந்தம் எடுத்துவிட்டு, வடசென்னையை சேகர் பாபுவுக்கு வேண்டியவர்களும், மத்திய சென்னையில் ஆணையர் குமரகுருபரன் மனைவியும், தென்சென்னையை அவர்களுக்கு வேண்டியவர்களுக்கும் பிரித்து கொண்டுள்ளனர். இதில் கமிஷன் அதிகம் வருவதால் குமரகுருபரன் எங்களது பேச்சை செவிமடுத்தும் கேட்பதில்லை. எங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. தூய்மை பணியாளர்கள் ஒப்பந்தத்தை அவரது மனைவி மறைமுகமாக மேற்கொண்டு வருவதால்தான் குமரகுருபரன் எங்களை அலட்சியமாக கையாள்கிறார். அதனால்தான் குமரகுருபரன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம்.
அவுட் சோர்சிங் மூலம் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அடித்தள ஊழியர்கள் நியமனத்தால் ஒப்பந்ததாரர்கள் கொழுத்து வருகிறார்கள். ஒவ்வொரு ஒப்பந்த பணியாளர் சம்பளத்திலும் 25 சதவிகிதம் குறைக்கப்பட்டு குமரகுருபரன் மனைவியும், சேகர் பாபுவும், ஒப்பந்த நிறுவனமும் சம்பாதித்து ருசி பார்க்கிறார்கள்.’’ என்கின்றனர்.
திமுக அரசு 2021 ம் ஆண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் என்கிற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதால் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்த விவகாரம் குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில்திமுக அரசுக்கு பெரும் அரசியல் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘‘தற்போது தமிழக அரசு ஆசிரியர்களுக்கு அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டத்தால் அரசின் ஓய்வூதிய நிதியத்திற்கு வழகத்தைவிட ரூ 13,000 கூடுதலாக தர வேண்டி இருக்கும். இதுமட்டுமின்றி தமிழக அர்சு சார்பில் கூடுதலாக ஆண்டுக்கு 11,000 கோடிகள் அரசின் பங்களிப்பாக செலவாகும். இதை சமாளிப்பதற்கு அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்பது தெரியவில்லை.
அதேவேளை தூய்மை பணியாளர்களை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்காமல் அரசே நேரடியாக சம்பளம் தருவதன் மூலம் அரசுக்கு எந்த இழப்புமில்லை. அந்த ஒப்பந்த நடைமுறையின் மூலமான இழப்பை தூய்மை பணியாளர்களின் அடிமாட்டுக் கூலியில் இருந்தே எடுத்துக் கொண்டு, அவர்களின் அடி வயிற்றில் அடிக்கிறார்கள். இந்த எளிய தூய்மை பணியாளர்கள் அயராது நாளும், பொழுதும் போராடி கைதாகி வருகிறார்கள். அவர்களுக்கான நீதி கிடைப்பதற்கு தடையாக இருப்பது இவர்களை காண்டிராக்ட்டுக்கு விடுவதில் ஆட்சியாளர்களான சேகர்பாபுவும், ஆணையர் குமரகுருபரனும் அடிக்கும் கமிஷன் பணம் என்பதை விடுத்து வேறொன்றுமே இல்லை. தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களே.
இந்த விவகாரத்தில் சமூகத்திற்காக பாடுபடும் தூய்மை தொழிலாளர்களுக்காக நீதி கேட்க, ஒன்றுபட்டு குரல் கொடுக்க, இந்த சமூகம் தயாரற்ற நிலையில் இருப்பதே ஆட்சியாளர்களின் ப்ளஸ் பாயிண்ட். எட்டு, பத்து வருஷமாக ஓடாக உழைத்து தேய்ந்தும் எங்களை நிரந்தப்படுத்தி, வாழத் தகுந்த மாதிரியான ஒரு குறைந்தபட்ச ஊதியத்தை தரமறுக்கிறீர்களே.. என செவிலியர்கள் இரவு பகலுமாக போராடினார்கள். அவர்களையும் மூர்க்கத்தனமாக கைது செய்து எங்கெங்கோ கடத்திச் சென்று அலைக்கழித்தது அரசு. இவர்களின் எண்ணிக்கை வெறும் எட்டு ஆயிரம் தான். எண்ணிக்கை பலம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. வலிமை உள்ளவர்களால் தான் அரசாங்கத்தையே வழிக்கு கொண்டு வர முடிகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
