திருச்சி

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜெ.தீபா பேரவைத் தலைவர் தீபாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதன் மூலம் காங்கிரசு தலைமையில் புதிய ஊழல் குற்றச்சாட்டு இல்லாத அணியை உருவாக்கும் தருணம் இதுவே என்று தமிழக காங்கிரஸ், விவசாய அணி பொது செயலர் முரளிதரன் யோசனைத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜெயலலிதாவிற்கு பின் அதிமுகவின் தலைமைக்கு வந்த சசிகலாவுக்கு அதிமுக அமைச்சர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து துதி பாடி வருகின்றனர். ஆனால், மக்கள் மத்தியில் ஆதரவு என்பது குறைவே.

ஆனால், மறுமுனையில், சசிகலாவை எதிர்த்து நிற்கிறார் தீபா. தற்போது ஜெ.தீபா பேரவையைத் தொடங்கி சேவல் சின்னத்தையும் பெற்றுவிட்டார். இவருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஆதரவும், மக்களின் ஆதரவும் வலுத்துக் கொண்டே போகிறது.

இந்த நிலையில், “சசிகலாவுக்கு எதிராக, அதிமுக தொண்டர்களின் ஆதரவைப் பெற்று வரும் தீபாவுக்கு காங்கிரஸ் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும்” என்ற கோரிக்கை எழுப்பியுள்ளார் தமிழக காங்கிரஸ், விவசாய அணி பொது செயலர் முரளிதரன்.

அவர் மேலும் கூறியதாவது:

“அதிமுகவுக்கு சோதனையான காலங்களில் எல்லாம், அதிமுகவும், காங்கிரசும் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்தித்துள்ளன. தற்போது இருக்கும் சூழலில் அ.தி.மு.க தொண்டர்கள் விரும்பும் தீபாவுக்கு, காங்கிரசு கட்சி ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும்.

அதற்கு ஏற்றார் போல், தற்போது, தமிழக காங்கிரஸ் தலைவராக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் அரசியலில் வளர்த்தெடுக்கப்பட்ட திருநாவுக்கரசர் தான் இருக்கிறார்.

அவர், தமிழக அரசியல் சூழலை, காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் எடுத்து கூறி, தீபாவுக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும். மேலும், காங்கிரஸ் தலைமையில், புதிய ஊழல் குற்றச் சாட்டு இல்லாத அணியை ஏற்படுத்த சரியான தருணம் இதுவே” என்று அவர் யோசனைக் கூறியுள்ளார்.