கச்சத்தீவை தாரைவார்த்தது காங்கிரஸ், திமுக: வேலூர் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது காங்கிரஸ், திமுக ஆகிய இரு கட்சிகளே என பிரதமர் மோடி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பாஜக வேட்பாளர்களை ஆதாரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வேலூர் மக்களவைத் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும், பாஜக கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது காங்கிரஸ், திமுக ஆகிய இரு கட்சிகளே என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் பேசுகையில், “காங்கிரசு ஆட்சியில் இருந்தபோது, இவர்கள் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கினர். எந்த அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது? இந்த முடிவு யாருடைய நலனுக்காக எடுக்கப்பட்டது? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “கச்சத்தீவு அருகே சென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த மீனவர்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து விடுவித்து அழைத்து வருகிறது. இதுமட்டுமின்றி, ஐந்து மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் நான் அவர்களை உயிருடன் மீட்டேன். திமுகவும், காங்கிரஸும் மீனவர்களுக்கு எதிரான குற்றவாளிகள் மட்டுமல்ல, இந்த தேசத்திற்கு எதிரான குற்றவாளிகள்.” என கடுமையாக விமர்சித்தார்.
ஒட்டுமொத்த தமிழ்நாடும் மீண்டும் மோடி அரசு வேண்டும் என்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்!
முன்னதாக, கச்சத்தீவு எப்படி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது என வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற தகவல்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டதையடுத்து, தமிழகத்தில் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாகியுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி, இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ள பாஜக, 1974 ஆம் ஆண்டில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக விமர்சித்து குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறது.
“கச்சத்தீவில் வெளிவரும் புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் செய்யவில்லை.” என பிரதமர் மோடி ஏற்கனவே தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியிருந்த பிரதமர் மோடி, இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வெளிப்படையாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது காங்கிரஸும், திமுகவும் என குற்றம் சாட்டியுள்ளார்.
அதேசமயம், கடந்த பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள் என கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மத்திய பாஜக அரசை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.