திருவண்ணாமலை

கலசப்பாக்கத்தில் பாலம் கட்டும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதில் அதிமுகவின் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வட்டார வளர்ச்சி அலுவலகம் சூறையாடப்பட்டது. இதனால் பயந்துபோன வட்டார வளர்ச்சி அலுவலக பெண் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.45 இலட்சம் மதிப்பில் பாலம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீட்டை அதிகாரிகள் தயார் செய்தனர்.

இந்தப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி வரவேற்கப்படுவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் சஞ்சீவ்குமார் அறிவித்திருந்தார். அதன்படி, காலை முதலே ஏராளமானோர் ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான படிவங்களை அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டனர்.

பிற்பகல் 2 மணிக்கு புதுப்பாளையம் பகுதி அதிமுக ஒப்பந்ததாரர்கள் சிலர் வந்து ஒப்பந்தப்புள்ளி படிவத்தை பெட்டியில் போட முயன்றனர். இதற்கு கலசப்பாக்கம் பகுதி அதிமுக ஒப்பந்ததாரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து, பிற்பகல் 2.45 மணிக்கு கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்து வந்த 15-க்கும் மேற்பட்டோர் திடீரென வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் ஒப்பந்தப்புள்ளி படிவங்களைப் போட முயன்றனர். இதனால் அதிமுகவினர் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.

அதனை தடுக்க முயன்ற காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலரையும் அதிமுகவினர் தள்ளி விட்டனர். சிலர் அலுவலக மேஜை, நாற்காலிகளை உடைத்தனர். இதனால் பயந்துபோன வட்டார வளர்ச்சி அலுவலக பெண் ஊழியர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

அலுவலகமே போர்க்களமாக மாறியதால், ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்படுவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் சஞ்சீவ்குமார் அறிவித்தார்.