கரூர்
 
நெல் மூட்டைகளை வாங்கிக் கொண்டு ரூ.2¾ கோடியை தராமல் மோசடி செய்த கணவன், மனைவி மற்றும் கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிந்த காவலாளர்கள் விசாரணை வேட்டையை தொடங்கியுள்ளனர். 

கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா நச்சலூரைச் சேர்ந்தவர் ராஜா (55). இவர் விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை பெற்றுக்கொண்டு அதனை விற்பனை செய்து கொடுக்கும் தொழில் செய்து வந்தார். 

இவர் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்த புகார் மனுவில், "நான் உள்பட எனது நண்பர்கள் ஆறு பேர் சேர்ந்து குளித்தலை பகுதியிலுள்ள விவசாயிகளிடம் கடந்த சில மாதங்களுக்கு நெல் கொள்முதலில் ஈடுபட்டோம். 

அதன்பின்னர் அந்த நெல் மூட்டைகளை, சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா வேப்பநத்தம் பகுதியில் பி.ஆர்.சி. டிரேடர்ஸ் என்கிற நிறுவனத்தை நடத்தி வரும் சின்னக்கண்ணு மற்றும் அவரது மனைவி கௌசல்யா ஆகியோரிடம் ரூ.3 கோடியே 50 இலட்சத்து 98 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்தோம். 

பதினைந்து நாட்களில் மொத்தப் பணத்தையும் தருவதாக அவர்கள் கூறினர். ஆனால், தற்போது வரை அவர்கள் வெறும் ரூ.76 இலட்சத்து 54 ஆயிரத்து 926-ஐ மட்டுமே கொடுத்துள்ளனர். மீதிப்பணம் சுமார் ரூ.2¾ கோடியை இன்னமும் திருப்பித்தராமல் மோசடியில் செய்கின்றனர். 

இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும். மேலும், மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும்" என்று அதில் கூறியிருந்தனர். 

இந்த புகார் குறித்து குற்றபிரிவு காவல் ஆய்வாளர் அம்சவேணி, மோசடியில் ஈடுபட்ட சின்னகண்ணு, கௌசல்யா மற்றும் அவர்களது கார் ஓட்டுநர் ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளார்.