கரூர்

கரூரில் காவிரி மற்றும் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கரூர் மாவட்ட 8-வது மாநாடு நடைப்பெற்றது. இதற்கு எம்.ஷேசன், ஆர்.ராஜேந்திரன், எஸ்.தெய்வானை ஆகியோர் தலைமைத் தாங்கினர். 

மாநாட்டுக் கொடியை பி.கே. பழனியப்பன் ஏற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் பி. பாலன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கே. சண்முகம் வரவேற்றார். மாநில துணைச் செயலாளர் மூ. வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் நா. பெரியசாமி ஆகியோர் மாநாட்டைத் தொடங்கி வைத்தும், இன்றைய அரசியல் நிலைகள் குறித்தும் பேசினர். 

மாவட்ட துணைச் செயலாளர் உடையவர் மோகன் வேலை அறிக்கை வாசித்தார். இதில், 35 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த மாநாட்டில், "உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி மத்திய அரசு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் நீர் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். 

கரூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் அமராவதி ஆற்றின் குறுக்கே 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்டி நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வறட்சியால் வேலை இழந்த விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வறட்சி நிவாரணம் குடும்பம் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கக் கோரி கடந்த ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கரூர் மாவட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டட கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும். 

குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.