தருமபுரி
 
விடுமுறையை கழிக்க ஒகேனக்கல்லுக்கு சென்ற கல்லூரி மாணவர் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ளது எர்ரங்காடு. இந்தப் பகுதியைச் சேர்ந்த ராஜி மகன் சிவலிங்கம் (19). இவர் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். 

நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்லூரி விடுமுறை என்பதால் சிவலிங்கம் தனது நண்பர்களுடன் ஒகேனக்கல்லுக்குச் சென்றுள்ளார். அவர்கள் அனைவரும் சாரணர் கட்டிடம் பகுதிக்குச் சென்று நண்பர்கள் அனைவரும் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். 

அப்போது மாணவர் சிவலிங்கம் ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்துள்ளார். அப்போது திடீரென அவர் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டதைக் கண்டு நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நண்பர்கள், அருகில் இருந்தவர்களின் உதவியோடு சிவலிங்கத்தை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவரை காப்பாற்ற முடியவில்லை. 

ஆற்றில் மூழ்கி மாணவர் இறந்துவிட்டார் என்ற தகவல் அறிந்ததும் ஒகேனக்கல் காவலாளர்கள், தீயணைப்புதுறையினர் சம்பவ் இடத்துக்கு விரைந்தனர். பின்னர், சிவலிங்கத்தின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.