திருவண்ணாமாலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தமிழக அரசு பேருந்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டது பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலையில் இருந்து காலையில் 9 மணிக்கு போளூர் வழியாக ஜவ்வாது மலை சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த ஆட்சியர் பிரசாந்த், மாலை 4.30 மணியளவில் போளூர் வழியாக மீண்டும் திருவண்ணாமலைக்கு திரும்பினார். அப்போது, அதே முதல் இருக்கையில் அமர்ந்து இன் முகத்துடன் மக்களோடு மக்களாக பயணம் மேற்கொண்டார் ஆட்சியர் பிரசாந்த்.

அப்பேருந்தின் பின்னால் மாவட்ட ஆட்சியர் தனி வாகனமும் உடன் செல்வதை படத்தில் காணலாம்.

முன்னதாக, கடந்த மாதம் 11-ம் தேதி திருவண்ணாமலை அடுத்த சமுத்திரம், தண்டராம்பட்டு மெயின் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டு நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதனை கண்ட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் காரிலிருந்து இறங்கி கீழே விழுந்த அந்த வாலிபரை தனது காரிலேயே அழைத்து சென்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்ததார்.

இதனைதொடர்ந்து, மதிய உணவு வேளையின் போது, பூங்கா பகுதி ஒன்றின் புல் தரையின் மீது சக ஊழியர்களுடன் அமர்ந்து சகஜமாக ஆட்சியர் பிரசாந்த் மதிய உணவு சாப்பிட்ட புகைப்படங்களும், திருவண்ணாமலை மாவட்டம் அரடாப்பட்டு கிராமத்திலுள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்ககாக சமைக்கப்பட்டிருந்த சத்துணவை சாப்பிட்டு பார்த்து உணவின் தரம் குறித்து ஆய்வு செய்த புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.