இராமநாதபுரம்

தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் ஒரே நாளில் ஆமைகள் இட்டுச்சென்ற 1305 முட்டைகளை வனத்துறையினர் சேகரித்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் இருந்து அரிச்சல்முனை கடற்கரை வரை ஆமைகள் முட்டையிட்டுச் சென்றுள்ளதா? என்பதை கண்டறிய வேட்டைதடுப்பு காவலர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

வேட்டைதடுப்பு காவலர்களின் இந்த தேடும் பணிக்கு வனச்சரகர் சதீஷ் தலைமைத் தாங்கினார். இந்த அணியில் வனத்துறையினரும் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, எம்.ஆர்.சத்திரம், கம்பிப்பாடு, அரிச்சல்முனை உள்ளிட்ட எட்டு இடங்களில் ஆமைகள் இட்டுச் சென்ற 1305 முட்டைகளை வனத்துறையினர் சேகரித்தனர்.

சேகரித்த ஆமை முட்டைகளை வனத்துறையினர் எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் மணலில் பாதுகாப்பாக புதைத்து வைத்தனர். மேலும், ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த முட்டைகளில் இருந்து வெளிவந்த ஆமை குஞ்சுகள் சிலவற்றையும் கடலில் கொண்டு சென்றுவிட்டனர்.

இதுபற்றி வனச்சரகர் சதீஷ், "தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் நேற்று ஒரு நாளில் மட்டும் ஆமைகள் இட்டுச்சென்ற 1305 முட்டைகளை சேகரித்து குஞ்சு பொரிப்பதற்காக பொரிப்பகத்தில் வைத்துள்ளோம்.

கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி 25-ஆம் தேதி வரை மட்டும் தனுஷ்கோடி கடற்கரையில் பல்வேறு இடங்களில் ஆமைகள் இட்டு சென்றதில் 9000 ஆமை முட்டைகள் சேகரித்து குஞ்சு பொரிப்பதற்காக பொரிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதுவரை 504 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு மாதங்கள் வரை ஆமைகள் முட்டையிடும் சீசன் உள்ளதால் இந்தாண்டு அதிகளவில் ஆமை முட்டைகள் சேகரிக்க வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.