கோவை விடுதியில் இருந்த மாணவிகளை பெண் வார்டன் தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக எழுந்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த விடுதி உரிமையானர் ஜெகநாதன் நெல்லையை அடுத்த ஆலங்குளத்தில் கிண்ற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.

கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் ஜெகநாதன் என்ற  தொழில் அதிபர்  பெண்கள் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் இளம்பெண்கள் தங்கி இருந்தனர். இங்கு, கோவையை சேர்ந்த புனிதா என்பவர் வார்டனாக இருந்து வந்தார்.

விடுதி உரிமையாளரின் பிறந்த நாள் விருந்து நிகழ்ச்சி நட்சத்திர ஓட்டலில் நடப்பதாக, 5 மாணவிகளை புனிதா ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றார். அங்கிருந்து வெளியேறி மாணவிகள் விடுதி வந்தனர். சம்பவத்தை அறிந்து அதிர்ந்து போன பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த விடுதி முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.இதையடுத்து ஜெகநாதன் மற்றும் புனிதா ஆகியோர் தலைமறைவாயினர்.

தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு மாணவிகளை அழைத்துச்சென்ற வார்டன் புனிதா, விடுதி உரிமையாளர் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர், நீங்கள் அவரிடம் எப்போது வேண்டுமானாலும் பேசலாம், நீங்கள் என்ன கேட்டாலும் அவர் உங்களுக்கு செய்வார், உங்களுக்கு தேவையான வசதிகளையும் அவர் செய்து கொடுப்பார். நீங்கள் அவரிடம் ஜாலியாக இருந்தால் போதும். எப்போதும் உங்களை அழைக்க மாட்டார், அத்துடன் இந்த வி‌ஷயமும் வெளியே தெரியாது என்று கூறி உள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அதுபோன்ற தவறை நாங்கள் செய்ய மாட்டோம் என்று கூறி உள்ளனர். உடனே புனிதா தனது செல்போனில் வாட்ஸ்–அப்பில் ‘வீடியோ கால்’ மூலம் ஜெகநாதனை தொடர்பு கொண்டார். ‘வீடியோகாலில்’ வந்த அவர் நிர்வாணமாக நின்றபடி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், உடனே அந்த ஓட்டலை விட்டு வெளியேறி உள்ளனர்.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுபோன்று சில மாணவிகளை புனிதா வேறு ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச்சென்று உள்ளார். அவர்கள் சாப்பிட்ட பின்னர் குளிர்பானத்தை வாங்கி கொடுத்தார். அதில் அந்த மாணவிகளுக்கு தெரியாமல் மயக்க மாத்திரையையும் கலந்துள்ளார்.

அந்த மாத்திரை சரியாக கரையவில்லை. அதை மாணவிகள் குடித்ததும் லேசாக மயங்கி உள்ளனர். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய புனிதா, உடனடியாக ஜெகநாதனுக்கு தகவல் கொடுத்து அவரை அங்கு வரவழைத்துள்ளார். அவர் அந்த மாணவிகளிடம் அத்துமீறி நடந்தபோது, அவர்களுக்கு திடீரென்று மயக்கம் தெளிந்தது. உடனே அவர்கள் அங்கிருந்து கூச்சலிட்டபடி வெளியே ஓடி சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அவர்கள் சக மாணவிகளிடம் எதுவும் தெரிவிக்காததால் தான் மீண்டும் புனிதா வேறு மாணவிகளை ஓட்டலுக்கு அழைத்துச்சென்று வலைவிரித்து உள்ளார். அதில் சிக்காத மாணவிகள் நடந்த சம்பவம் குறித்து, சக மாணவிகளிடம் தெரிவித்ததால் தற்போது உண்மை வெளியே வந்துள்ளது.

இந்நிலையில் தனியார் விடுதி உரிமையாளர், ஜெகநாதன், திருநெல்வேலியை அடுத்த  ஆலங்குளம் அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடிபோதையில் விழுந்து இறந்தாரா?  அல்லது கொலை செய்யப்பட்டாரா ? என்பது குறித்து போலீசார் விசானை நடத்தி வருகின்றனர்.