ஈரோடு

ஈரோட்டில் நடைபெறவுள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் பணிகளை கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஜி.கோவிந்தராஜ் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நடைபெறவுள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் பணிகளை கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஜி.கோவிந்தராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

பவானி அருகே திப்பிசெட்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தொட்டிபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களில் உறுப்பினர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலைப் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து ஈரோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டார். பின்னர், அங்குள்ள இணையதளம், தொலைபேசி ஆகிய வசதிகளையும் ஆய்வு செய்தார்.

அதன்பின்னர், வேட்பு மனு பெறுதல், பரிசீலனை, வாக்குப் பதிவு, எண்ணிக்கை முடிவு அறிவித்தல் என அனைத்துப் பணிகளையும் தேர்தல் ஆணையர் உத்தரவுப்படி விதிகளின்படியும் செயல்படுத்த வேண்டும் என்று அங்குள்ள அலுவலரிடம் அறிவுரை வழங்கினார். 

பின், ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சி.பார்த்திபன், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப் பதிவாளர் ராமதாஸ், துணைப் பதிவாளர் ப.மணி, கோபி துணைப் பதிவாளர் தியாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை வழங்கினார்.