நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் செப்டம்பர் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்பார் என தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் அருகேயுள்ள பாலையூர் ஊராட்சியில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் ஓ.எஸ்,மணியன் கூறியது:  

“மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நாகப்பட்டினம் மாவட்டத்தில் செப்டம்பர் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடபாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த விழாவுக்கான அரங்கு அமைத்தல், பார்வையாளர்களுக்கு இருக்கை வசதிகள், சாலை, குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கருணாகரன், வருவாய் கோட்டாட்சியர் சி.கண்ணன், நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் இளம்வழுதி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.