Kalaignar Kaivinai Scheme: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்முனைவோரை ஊக்குவிக்க 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்முனைவோரை ஊக்குவிக்க 5 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

இதையும் படிங்க: 1,000 கிலோ தங்கம்.. சமயபுரம் கோவில் முதலிடம் - தமிழக அரசுக்கு கிடைத்த வருமானம்!

முதல் அறிவிப்பு

அறிவுசார் சொத்துரிமையான ‘புவிசார் குறியீடு’ பெறுவதற்காக வழங்கப்பட்டு வரும் மானியம் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு இலட்சமாக
உயர்த்தி வழங்கப்படும்.

இரண்டாவது அறிவிப்பு

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்படும் வாகன மற்றும் பொறியியல் உதிரி பாகங்கள் தயாரிக்கின்ற தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அளவியல் மற்றும் உலோகவியல் ஆய்வகங்கள் ஐந்து கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

மூன்றாவது அறிவிப்பு

தொழில் நிறுவனங்கள் மிகுதியாக இருக்கின்ற காஞ்சிபுரம், பழந்தண்டலத்தில் சாலை கட்டமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் அமைக்க ஐந்து கோடி ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

நான்காவது அறிவிப்பு

காக்களூர் உற்பத்தியாளர்கள் தொழிற்பேட்டையில், தொழில்நுட்ப திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி மையம் மற்றும் இயந்திர தளவாடங்கள் கூடிய பொது வசதி மையம் மூன்று கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

ஐந்தாவது அறிவிப்பு

குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள், உள்நாட்டில் வர்த்தக கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்க வழங்கப்படக்கூடிய காட்சிக்கூட கட்டணத்துக்கான நிதியுதவி, ஒரு இலட்சம் ரூபாயில் இருந்து இரண்டு இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.