புதுக்கோட்டையில் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

புதுக்கோட்டையில் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டையில் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரத்தில் துப்பாக்கி பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த பயிற்சியின் போது வீரர் ஒருவரின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு தவறுதலாக 11 வயது சிறுவன் தலையில் பட்டுள்ளது. கொத்தமங்கலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் புகழேந்தி, அரையாண்டு விடுமுறைக்காக பசுமலைப்பட்டியில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சிறுவன் உணவு அருந்திக்கொண்டிருந்த போது வீட்டின் கூரையை துளைத்த குண்டு சிறுவனின் தலையில் பாய்ந்ததாக கூறப்படுகிறது. அந்த வீரரின் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய 2 தோட்டாக்கள் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் சென்றிருக்கிறது.

அதில் ஒன்று முத்து என்பவரின் வீட்டின் சுவற்றை துளைத்தது. மற்றொன்று வீட்டின் வெளியே நின்றிருந்த அவரது பேரன் புகழேந்தியின் தலையில் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் துப்பாக்கிக் குண்டு சிறுவனின் மூளைக்குள் சென்று பக்கவாட்டில் இருப்பதாக கூறி, அறுவை சிகிச்சை மூலம் குண்டை அகற்ற தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, தஞ்சை அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுவன் தலையிலிருந்த குண்டு அகற்றப்பட்டது. மருத்துவர்களின் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை மூலம் தோட்டாவை வெளியே எடுத்துள்ளனர். அறுவை சிகிச்சை மூலம் தோட்டாவை எடுப்பது சவால் நிறைந்ததாக இருந்தது என்றும், தொடர்ந்து சிறுவன் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்ததுடன், சம்பவம் நடந்த இடத்தில் நேரடி விசாரணை மேற்கொண்டுனர். சிறுவனின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், வெடிபொருட்களை கவனக்குறைவாக கையாண்டு மனித உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்துதல், அலட்சியமாக செயல்பட்டு பிறரது பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட இரு பிரிவின் கீழ் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் மீது கீரனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். இதனை தொடர்ந்து பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் நிரந்தரமாக மூடப்படும் என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். இதனிடையே உயிரிழந்த சிறுவன் புகழேந்தி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.