cm give white report for cauvery issue asks p.r.pandian

தஞ்சாவூர்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் வாழ்வாதாரத்துக்கு மேற்கொண்ட நடவடிக்கை குறித்தும், காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கேட்டார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தஞ்சையில் ஜூன் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 1-ஆம் தேதி முதல் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வந்தது. நேற்று நிறைவு நாளான 5-வது நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார்.

இந்தப் போராட்டத்தை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தொடங்கி வைத்துப் பேசினார்.

“உண்ணாவிரதத்தில், குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்கும் வகையில் காவிரி நீரை பெற்று தர வேண்டும்.

உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும்.

ராசிமணல், மேகதாது ஆகிய இடங்களில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைக் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழக வாழ்வாதாரத்தை அபகரிக்கும் நோக்கோடு செயல்படும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலை தமிழக அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் த.மா.கா. மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், விவசாய அணித் தலைவர் புலியூர் நாகராஜன் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

பின்னர், பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி

“கடந்த ஐந்து ஆண்டுகளாக குறுவை சாகுபடி இல்லை. சம்பா சாகுபடியும் பொய்த்து விட்டது. குடிநீருக்கும் தண்ணீர் இல்லை. இந்த நிலையில் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரை பெற்றுத்தர தமிழக அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் விவசாயிகள் தற்கொலை தான் தொடரும். தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது இருந்திருந்தால் காவிரி விவகாரத்தில் தண்ணீர் பெற உரிய நடவடிக்கை எடுத்து இருப்பார். அவருடைய வழியில் ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் வாழ்வாதாரத்துக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை. எனவே, இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று அவர் கூறினார்.