பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி மதுக்கடையை திறக்க விடாமல் பொதுமக்கள் முற்றுகையிட்ட நிலையில், மதுக் கடையை மூடக் கூடாது என்று மதுப் பிரியர்களும் கோஷங்கள் ஏழுப்பிய சம்பவம் ராமநாதபுரத்தில் நடைபெற்றுள்ளது.

ராமநாதபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தால், முதனாள், இடையர்வலசை, கிருஷ்ணாநகர், நாகநாத நகர் ஆகிய பகுதிகளுக்கு 4 மதுக்கடைகள் மாற்றப்பட்டிருந்தன.

இந்த கடைகள், பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால், திறக்கக் கூடாது அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனாலும், மதுக்கடைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

மது அருந்திய சிலர் சாலையில் செல்வோரிடம், அத்துமீறி நடப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். மேலும், அந்த மதுக்கடையை திறக்க விடாமல் அவர்கள் முற்றுகையிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் வட்டாட்சியர் சண்முக சுந்தரம், துணை வட்டாட்சியர் வீர ராஜா, கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குமரன் மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதி அளித்த பிறகே அவர்கள் கலைந்து சென்றனர். மேலும், டாஸ்மாக் கடையை திறக்க வேண்டாம் எனவும் வட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே, டாஸ்மாக் கடைக்கு அருகில், 10-க்கும் மேற்பட்டவர்கள், டாஸ்மாக் கடையை மூடக் கூடாது என்றும், மூடினால் போராட்டம் நடத்துவோம் என்றும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், அதிகாரிகள் அவர்களிடமும் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.