Chudidars decoration to Amman! Kasturi latest Twitter

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயாம்பாள் ஆலய அம்மன் சிலைக்கு சுடிதார் அணிவித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து கோவில்களில் பொதுவாக அம்மனுக்கு பட்டு அணிவித்து பூஜை செய்வதுதான் வழக்கம். ஆனால் மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் அபயாம்பிகை அம்மனுக்கு அர்ச்சகர்கள் ராஜ் மற்றும் கல்யாணம் ஆகியோர் சுடிதார் அணிவித்து அலங்காரம் செய்துள்ளனர்.

தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வைரலானதை அடுத்து கோவிலை நிர்வகித்துவரும் திருவாவடுதுறை ஆதீனம், இரு அர்ச்சகர்களையும் பணிநீக்கம் செய்துள்ளார். ஆகம விதிகளை மீறி ராஜ் மற்றும் கல்யாணம் ஆகிய இரு அர்ச்சகர்களும் செயல்பட்டதாக கூறி அவர்களை ஆதீனம் நீக்கியுள்ளார்.

இது தொடர்பாக நடிகை கஸ்தூரி, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார். அதில், மயிலாடுதுறை அபயாம்பிகை அம்மனுக்கு மிக அழகிய முறையில், கண்ணியமான கலா ரசனையுடன் புதுமையாக சுடிதார் அலங்காரம் செய்வித்த இரண்டு குருக்களைப் பணி நீக்கம் செய்திருப்பது நியாயமற்ற பழமைவாதம். திருவாவடுதுறை ஆதீனம் இருவரையும் மீண்டும் பாராட்டி பணியில் அமர்த்த வேண்டும்.

மின் விளக்கு, எலக்ட்ரிக் மேளம், ஏசி, ஒலி பெருக்கி, இது எதுவும் ஆகம கேடு இல்லை. ஒரு வித்தியாசமான அலங்காரத்தில்தான் ஆகமத்துக்கு ஆபத்தா? குளிக்காமல், ஏன் குடித்துவிட்டுக்கூட சிலர் வருகிறார்கள். எல்லாவிதமான ஆடையிலும் வருகிறார்கள். ஆனால் அம்மனுக்கு ஆடைக்கட்டுப்பாடா? என்று கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார்.