சிவகங்கை

 

சிவகங்கையில் வசித்து வரும் நரிக்குறவர்களின் வீடுகளில் சமீபத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அவர்களின் பிள்ளைகள் தேர்வுக்கு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாடம் படிக்கின்றனர்.

 

சிவகங்கை மாவட்ட மின்பகிர்மான மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நரிக்குறவர்கள் மனு ஒன்றை அளித்தனர்.

 

அந்த மனுவில், "சிவகங்கை மாவட்டம், பையூர் பழமலை நகரில் சுமார் 150-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வசித்து வருகிறோம். இங்கு சில வீடுகளில் இலவச மின்சாரமும், பல வீடுகளில் கட்டண மின் இணைப்புகளும் உள்ளன.

 

இரண்டு வாரத்துக்கு முன்பு, திடீரென நாட்டரசன்கோட்டை துணை மின் நிலையத்திலிருந்து வந்திருந்த பணியாளர்கள் எந்தவொரு முன்னறிவிப்புமின்றி சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில்  மின் இணைப்புகளை துண்டித்து விட்டனர்.

 

இதனால், நாங்கள் இரவு நேரங்களில் அச்சத்துடனேயே இருந்து வருகிறோம். மேலும், தற்போது தேர்வு நேரம் என்பதால், எங்களது குழந்தைகளும் படிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்தான் பாடங்களை எழுதியும், படித்து வருகின்றனர்.

 

எனவே, கருணைப் அடிப்படையில், எங்கள் வீடுகளில் துண்டித்த மின் இணைப்புகளை மீண்டும் வழங்கவேண்டும்.

 

இவை தவிர, இலவச மின் இணைப்புகளுக்கு ஆயிரக்கணக்கில் மின் கட்டணத்  தொகை கட்டுமாறு தெரிவிக்கின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை  எடுக்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தனர்.