Asianet News TamilAsianet News Tamil

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு.. என்ன தெரியுமா?

மாசுபாடான நீரை அருந்தியதால் குடிமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான செய்திகள் வருவது வருந்தத்தக்கது; இத்தகைய சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Chief Secretary shivdas meena action order to all District Collectors tvk
Author
First Published Sep 10, 2023, 6:44 AM IST

அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்;- அண்மையில் தண்ணீர் மாசுபாடு தொடர்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைச் சுட்டிக்காட்டவும் இத்தகைய சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவும் விரும்புகிறேன். அசுத்தமான நீரை அருந்திய பலர் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்; ஒருவர் உயிரிழக்கவும் நேரிட்டது. கடந்த ஆண்டு, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 60 சதவீதம் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புக் குழாய்களை (FHTC) அமைத்து, இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டது என இந்திய அரசு அங்கீகரித்துள்ளது. இத்தகைய வகையில் சிறந்து விளங்கிய நம் மாநிலத்தில், மாசுபாடான நீரை அருந்தியதால் குடிமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான செய்திகள் வருவது வருந்தத்தக்கது; இத்தகைய சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Chief Secretary shivdas meena action order to all District Collectors tvk

இது தொடர்பாக, குடிநீர் விநியோகம் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களைத் தலைமைச் செயலர் கேட்டுக்கொண்டுள்ளார். குடிமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் தொடர்பாகப் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்:

* சேதமடைந்த மற்றும் நீர்க் கசியும் குழாய்களை அடையாளம் கண்டு சரிசெய்தல்: உரிய துறையினருடன் ஒன்றிணைந்து சேதமடைந்த மற்றும் நீர்க் கசியும் குழாய்களை உடனடியாகக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் விநியோக உள்கட்டமைப்பு சரியான முறையில் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

* மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பாதுகாப்பு: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலும் தரைமட்ட நீர்த்தேக்கங்களிலும் தேக்கிவைக்கப்படும் நீர் மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் உறை அடுக்குகள் (cover slabs) அமைக்கப்பட்டிருப்பதையும் பராமரிப்பு அறைகளில் மூடிகள் பொருத்தப்பட்டிருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் மேல்நிலைத் தொட்டிகளும் தரைமட்ட நீர்த்தேக்கங்களும் உரிய முறையில் பாதுகாக்கப்படுவதையும், அத்துமீறல்கள் நடைபெறாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

* மாசுபாட்டுக்கான காரணங்களைக் கண்டறிதல்: குடிநீர்க் குழாய்கள், தொட்டிகள் மற்றும் தரைமட்ட நீர்த்தேக்கங்களில் நீர் மாசுபாடு அடைவதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அதைச் சரிப்படுத்த வேண்டும். நீர் மாசுபாடு தொடர்பான அபாயங்களைக் களைவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

* உரிய வகையில் கிருமிநாசினி தெளித்து நீரைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல்: மேல்நிலைத் தொட்டிகளிலும் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளிலும் தேக்கப்பட்டிருக்கும் நீரில் தேவையான அளவில் பிளீச்சிங் பவுடர் கலந்து நீரின் தரத்தைப் பராமரித்து நீரைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

* குளோரின் கலத்தல்: நீரைச் சுத்தப்படுத்தப் போதுமான அளவு குளோரின் பொடி நீரில் கலப்பதை உறுதிப்படுத்த வேண்டும். குடிப்பதற்காக விநியோகிக்கப்படும் நீரில் கிருமிகள் எவையேனும் கலந்துவிடாத வகையில் நீரைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

* மேம்படுத்தப்பட்ட தரக் கண்காணிப்பு: பல்வேறு மூலங்களிலிருந்தும் தண்ணீர் மாதிரிகளை எடுத்து, அதை முறையான பரிசோதனைக்கு உட்படுத்தி நீரின் தரம் உரிய மட்டத்தில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய சோதனைகளை அதிக முறை நடத்தி தரமான கண்காணிப்பு முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

* களப்பரிசோதனை கருவிகளைப் பயன்படுத்துதல்: களப்பரிசோதனைக் கருவிகள் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவி குழு (SHG)
உறுப்பினர்களை நீரின் தரத்தைக் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ளப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களுக்குப் போதுமான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்; அவர்கள் தண்ணீர் மாதிரிகளை எடுத்துப் பரிசோதனை செய்வதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்; தண்ணீர் மாதிரிப் பரிசோதனைகளின் எண்ணிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும்.

* குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் ஒருங்கிணைப்பு: தமிழ்நாடு நீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளுடன் ஒருங்கிணைந்து அதிகப்படியான நீர் மாதிரிகளைச் சேகரித்து, நீரின் தரத்தைப் பரிசோதிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

* தகவல், கல்வி மற்றும் தகவல்தொடர்பு (IEC) பரப்புரை: தண்ணீரின் தரம் குறித்தும், பாதுகாப்பான குடிநீரைப் பொது மக்களுக்கு வழங்க
மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பரப்புரையை மேற்கொள்ள வேண்டும்.

* குறைகளைத் தீர்க்கும் அமைப்பு: குடிநீரின் தரம் தொடர்பான பிரச்சினைகளை உடனுக்குடன் களையும்வகையில் ஒரு வலுவான குறை தீர்க்கும் அமைப்பை நிறுவுதல் வேண்டும். குடிநீர் பிரச்சினை தொடர்பாக புகாரளித்தால் அவை சரியான நேரத்தில் தீர்க்கப்படுகிறது என்ற நம்பிக்கை குடிமக்களுக்கு ஏற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். 

மேலே குறிப்பிட்ட விரிவான நடவடிக்கைகள் அனைத்தையும் 30.09.2023 க்கு முன் நிறைவேற்றி முடிக்க வேண்டும். மேலும், இது தொடர்பான முன்னேற்றத்தையும் ஆக்கபூர்வமான விளைவுகளையும் கண்காணிக்க ஏதுவாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலருக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளருக்கும் விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும். 

Chief Secretary shivdas meena action order to all District Collectors tvk

நமது குடிமக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது; சுத்தமானதும் பாதுகாப்பானதுமான குடிநீரைப் பெறுவது அவர்களது அடிப்படை உரிமையாகும்.இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் உங்களின் முன்முயற்சியான நடவடிக்கைகள் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதுடன், அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கான நாம் எத்தகைய உறுதிப்பாட்டுடன் செயல்படுகிறோம் என்பதையும் தெளிவுபடுத்தும். இந்த முக்கியமான விஷயத்தில் ஆட்சியர்களின் அர்ப்பணிப்பையும் விரைவான நடவடிக்கைகளையும் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ள தலைமைச் செயலர், இது தொடர்பான மேல் நடவடிக்கைகள் குறித்து அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios