தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்களுக்கு 500 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகளை அடுத்த 2 வாரங்களுக்குள் மூட முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் பொறுப்பேற்ற தினமே மக்கள் முன்னிலையில் 3 முக்கிய திட்டங்கள் தொடர்பான கோப்புகளில் கையொப்பமிட்டார். அதன்படி 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தனி பாதுகாப்பு படை, போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த தனி அமைப்பு ஆகிய 3 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வகையில் தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அடுத்த இரு வாரங்களில் மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களால் உத்தரவிடப்பட்டது. மேற்படி ஆணைக்கிணங்க இந்த மூன்று இனங்களில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.