- Home
- Tamil Nadu News
- TN Politics: 60 ஆண்டு திராவிட அரசியலை ஒரே நாளில் கரைத்து குடித்த விஜய்.. ஸ்டாலின், சீமானை சந்தித்த பின்னணி இதுதான்!
TN Politics: 60 ஆண்டு திராவிட அரசியலை ஒரே நாளில் கரைத்து குடித்த விஜய்.. ஸ்டாலின், சீமானை சந்தித்த பின்னணி இதுதான்!
TN Politics: தங்களது அரசியல் எதிரிகளான ஸ்டாலினையும், சீமானையும் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் சந்தித்தது தமிழகத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது.

தமிழக முதல்வர் விஜய்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக கால்பதித்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. பின்பு திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உதவியுடன் தவெக ஆட்சியில் அமர்ந்தது. விஜய் முதல்வராக பதவியேற்றார்.
முதல்வராக பொறுப்பேற்ற மறுநாளிலேயே தமிழக அரசியலின் நடைமுறையை முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளார் விஜய். ஆம்.. யாரும் எதிர்பாராதவிதமாக பரம எதிரிகளான முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை சந்தித்து தமிழகத்தில் புதிய மாற்றத்தை .உண்டாக்கியுள்ளார்.

திமுக, அதிமுக பரம எதிரிகள்
தமிழக அரசியலை பொறுத்தவரை பேரறிஞர் அண்ணா முதல்வராக பொறுப்பேற்றபோது அரசியல் எதிரியான காமராஜரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பிறகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வெஸ் கலைஞர் கருணாநிதி காலத்தில் ஓரளவு அரசியல் நாகரீகம் பரவாயில்லை. பின்பு இது ஜெயலலிதா வெஸ் கருணாநிதி என மாறியபோது திமுக, அதிமுக வெறும் அரசியல் எதிரி என்பதுபோல் அல்லாமல் மிகப்பெரும் எதிரிகளாகவே பார்த்தனர். ஜெயலலிதாவின் கோபப்பார்வைக்கு ஆளாக வேண்டும் என்பதால் அதிமுக மூத்த நிர்வாகிகள் திமுக இல்லங்களில் நடக்கும் திருமணம் போன்ற விஷேங்களுக்கு செல்ல கூட பயந்தனர்.
ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தாலேயே அது அதிசயம் தான். இந்த இரு திராவிட கட்சிகளும் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி இதுதான் நிலைமை. இது மு.க.ஸ்டாலின் வெஸ் எடப்பாடி பழனிசாமி என மாறியபோதும் தொடர்ந்தது. ஆனால் இந்த வெறுப்பு அரசியலை தான் விஜய் இன்று ஒரே நாளில் அதிரடியாக மாற்றியுள்ளார்.
ஸ்டாலின், சீமானை சந்தித்த விஜய்
தேர்தலுக்கு முன்பாக விஜய் திமுகவை அரசியல்ரீதியாக எந்த அளவுக்கு விமர்சித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தவெக வெஸ் திமுக என நேரடியாக எதிர்த்தார். திமுகவை படுதோல்வி அடைய செய்தும் விட்டார். ஆனால் இன்று தான் கடுமையாக எதிர்த்த மு.க.ஸ்டாலினை சந்தித்து அனைவர் மனதிலும் இடம்பிடித்து விட்டார். விஜய் தான் எதிர்த்த ஸ்டாலினை சந்தித்தது கூட பெரிய விஷயம் அல்ல. ஆனால் தன்னை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்த சீமானை விஜய் சந்தித்தது தான் பெரும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
விஜய்யின் மாஸ்டர்பிளான்
இந்த சந்திப்பின் பின்னணியில் விஜய்யின் மாஸ்டர்பிளான் ஒளிந்துள்ளது. இப்போது அரசியல் களத்தில் விஜய்யை கடுமையாக எதிர்ப்பது திமுகவும், நாதாகவும் தான். எதிர்ப்பு இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது. ஆனால் இந்த கட்சிகளின் தலைவர்களை தேடி சென்றதன் மூலம் இந்த கட்சிகளின் ஒரு பிரிவினரிடம் ''என்னதான் இருந்தாலும் ஈகோ பார்க்காமல் தேடி வந்துள்ளாரே'' என பேச வைத்துள்ளார் விஜய். இதன்மூலம் இவர்களிடம் இருந்து ஆட்சிக்கு வரும் எதிர்ப்புகள் இனி கொஞ்சம் குறையும் என கணித்து செயல்பட்டுள்ளார். மு.க.ஸ்டாலினே 'விஜய் செய்தது அரசியல் நாகரீகம்' என்று பாராட்டியுள்ளார்.
எதிர்த்த மறுநாளே புகழ்ந்த எதிர்க்கட்சிகள்
மேலும் விஜய் பதவியேற்பின்போது தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்கு தள்ளி வந்தே மாதரம் இசைக்கப்பட்டது சர்சசையானது. இதை விஜய்க்கு ஆதரவுக்கு கொடுக்கும் விசிக, இடதுசாரிகள் என அனைவரும் ஒட்டுமொத்தமாக எதிர்த்தனர். ஆனால் இப்போது ஸ்டாலினை சந்தித்தது மூலம் 'அட! இதுதான் அரசியல் நாகரீகம் ' என எதிர்த்தவர்கள் வாயிலேயே ஒரே நாளில் நல்ல பெயர் வாங்கி விட்டார் விஜய். தன்னுடைய முதல் அரசியல் பயணம், முதல் பதவிக்காலம் என்பதால் அனைவரையும் அனுசரித்து கூடிய வரையில் ஆட்சிக்கான எதிர்ப்புகளை குறைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே விஜய்யின் சந்திப்புகள் நிகழ்ந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

