கலைஞர் கருணாநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி!
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவு நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி, 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி வயது முதிர்வினால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் காலமானார். அவரது 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திற்கு இடையே அவரது நினைவு தினத்தையொட்டி, மாநிலம் முழுவதும் திமுகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி கலைஞருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மற்றும் திருவாரூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அங்கு பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை முதலே பலரும் வருகை புரிந்து கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் திமுக கட்சியினர் சென்னை மெரீனாவில் உள்ள கலைஞர் நினைவிடம் நோக்கி பேரணி செல்லவுள்ளனர்.
இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவு நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் புகாழ்ஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து தனது குரல் பதிவு மூலம் அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, “உங்களை காண காலையில் அணிவகுத்து வருகிறோம். உங்களுக்கு சொல்ல ஒரு நல்ல செய்தி கொண்டு வருகிறேன். உங்கள் கனவுகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறோம் என்பதுதான் அந்த செய்தி. நீங்கள் இருந்து செய்ய வேண்டியதை தான் நான் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். 2024 தேர்தல் எங்களை எதிர்நோக்கி வந்து கொண்டிருக்கிறது. வழக்கமாய் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தல் அல்ல இது. இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா இருக்க முடியாதா என்பதற்கான தேர்தல் இது.
தமிழ்நாட்டில் கால் பதித்து இந்தியாவுக்காக குரல் எழுப்ப வேண்டும் என்று நீங்கள் சொல்வீர்கள். அப்படித்தான் இந்தியாவுக்கான குரலை எழுப்ப தொடங்கியுள்ளேன். அனைத்துக்கும் தொடக்கம் தமிழ்நாடு. சுயமரியாதை, கூட்டாட்சி இந்தியா, சமூக நீதி, சம தர்மம், மொழி, இன உரிமை, மாநில சுயாட்சி என உங்கள் கணவுகளை இந்தியா முழுமைக்கும் விரித்துள்ளோம்.” இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.