தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனைகள் தொடரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், பிரதமர் மோடியையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லிக்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அந்த வகையில் அதிமுக- பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியோ அதே பலத்தோடு இன்னும் தொடர்கிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அமலாக்கத்துறை தமிழகத்தில் அமைச்சர்களை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது. பல இடங்களில் அடுத்தடுத்து சோதனையில் ஈடுபட்டது. குறிப்பாக செந்தில் பாலாஜி, கேஎன் நேரு, துரைமுருகனுக்கு சிக்கல் ஏற்பட்டது.

தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை

தற்போது டாஸ்மாக்கில் நடைபெற்றதாக கூறப்படும் ரூ.1,000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் 2 நாட்களாக அமலாக்கத்துறை சோதனைநடத்தியது. மேலும் ரதீஷ் என்பவரின் வீட்டையும் அமலாக்கத்துறை சீல் வைத்தது. நடிகர் சிம்பு மற்றும் தனுஷ் படங்களை தயாரித்து வரும் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

நிதி ஆயோக் கூட்டம் - டெல்லி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழகத்தில் இப்படி பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் வருகிற 23ஆம் தேதி டெல்லி செல்லவுள்ளார். வருகிற 24ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். கடந்த 2015-ல் தொடங்கி இதுவரை 9 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் கலந்து கொள்ளும் வகையில் வருகிற 23ஆம் தேதி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது.

மோடியை சந்திக்கும் ஸ்டாலின்.?

கடந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. அப்போது மத்திய அரசு தமிழகத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லையென கூறி தமிழக முதலமைச்சர் புறக்கணித்திருந்தார். இந்த சூழ்நிலையில் வருகிற 24ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். எனவே டெல்லி செல்லும் முதலைமச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.