ஓடிசா ரயில் விபத்தில் தமிழர்கள் உயிரிழக்கவில்லை..! அமைச்சர்களை ஒடிசாவில் தங்கியிருக்க முதலமைச்சர் உத்தரவு
ஒடிசா ரயில் விபத்தில் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட உயிரிழந்தோர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோருள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்து- 294ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை
கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி நேற்று மாலை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவின், பாலசோர் அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி அருகிலுள்ள மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தது.
அதே நேரத்தில் அந்த பகுதியில் வந்த மற்றொரு ரயிலான பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் கடைசியில் உள்ள 4 பெட்டிகளும் கோரமண்டல் ரயிலில் இருந்து சிதறிய பெட்டிகளோடு மோதி மீண்டும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் இந்தியாவே அதிர்ந்தது. மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்ட நிலையில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1000க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழர்கள் உயிரிழக்கவில்லை
இந்தநிலையில் விபத்துகுள்ளான ரயில் வண்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 100 பேர் வரை பயணம் செய்ததாகவும், இதில் 35பேர் நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 101 பேர் முன்பதிவு செய்த நிலையில் 17 பேர் பயணம் மேற்கொள்ளவில்லையென்றும், 53 பேர் பாதுகாப்பாக உள்ளனர்.14 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. ரயில் விபத்து தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒடிசாவில் நேற்று ஏற்பட்ட கோர விபத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மனித உயிர்கள் பறிபோயிருக்கும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை. தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. தற்போது வரை அடையாளம் காணப்பட்ட உயிரிழந்தோர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோருள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
அமைச்சர்கள் ஒடிசாவில் தங்கி இருக்க உத்தரவு
ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அமைச்சர்கள் தலைமையிலான குழுவினர் மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாகச் சென்னை வந்தடைவதை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.மேலும், இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகச் சென்னையில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுடன், ஒடிசாவின் பதராக்-சென்ட்ரல் இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் 131 தமிழக பயணிகள் இன்று காலை 4.30 மணியளவில் சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களை தமிழக அமைச்சர்கள் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.
இதையும் படியுங்கள்