பெண் காவலர்களுக்கான பணி நேரம் மாற்றம்..! அதிரடியாக உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெண் காவலர்கள் காலை7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு பணிக்கு வரலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அவள் திட்டம் தொடக்கம்
தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புத் தபால் உறையினை வெளியிட்டு, 'அவள்' திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து மிதிவண்டித் தொடர் பேரணியை கொடியசைத்துத் துவக்கி வைத்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். அப்போது மகளிர் காவலர்களுக்கு நவரத்ன அறிவிப்பையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
புதிய அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர்
அதில், பெண் காவலர்கள் ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம் செய்யப்படும் என தெரிவித்தார். பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள், சென்னை, மதுரையில் கட்டித்தரப்படும், பெண் காவலர்களுக்கு கழிவறையுடன் கூடிய ஓய்வறைகள் கட்டித்தரப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டார். பெண் காவலர்களின் குழந்தை காப்பகங்கள் மேம்படுத்தப்படும் எனவும், ஆண்டு தோறும் கலைஞர் காவல் கோப்பை விருது வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல் வழங்கப்படும் என குறிப்பிட்டார். பெண்களுக்கு தனி துப்பாக்கி சுடும் போட்டிகள் நடத்தப்படும் எனவும், ஆண்டுதோறும் பெண் காவலர்களுக்கு தேசிய மாநாடும் பெண் காவலர்களுக்கு பணி ஆலோசனை குழு அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியின் போது அறிவித்தார்.
இதையும் படியுங்கள்