வைகோவின் நெஞ்சுரம் மற்றும் வேகத்தைப் பார்க்கும்போது அவருக்கு 82 வயதா? அல்லது 28 வயதா? என எண்ணத் தோன்றுவதாக திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இருந்து மதுரைக்கு நடை பயணம் மேற்கொள்ளும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “வைகோவின் நெஞ்சுரம் மற்றும் வேகத்தைப் பார்க்கும் போது அவருக்கு 82 வயதா அல்லது 28 வயதா என்ற சந்தேகம் எழுகிறது. வைகோவின் காலடி படாத இடமே இல்லை எனும் அளவுக்கு மக்கள் பிரச்சினைக்காக நடைபயணம் செய்தவர் வைகோ. இளைஞர்களுக்கு நல்வழி காட்டிட, அதுவும் இளைஞர்களுடனே ஒன்றுசேர்ந்து இந்தச் சமத்துவ நடைப்பயணத்தைத் தொடங்கும் அண்ணன் வைகோ அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்! பாராட்டுகள்.

இது மாதிரியான பயணங்களால் என்ன பயன் என்று சிலர் கேட்கலாம்? காந்தியின் நடைப்பயணமும் – மாவோ-வின் நீண்ட பயணமும் வரலாற்றில் புரட்சி ஏற்படுத்தியிருப்பது போன்று, அந்தத் தாக்கத்தை அவர்கள் உணர வேண்டும். இப்படியான, நடைப்பயணங்கள்தான், தலைவர்கள் மக்களிடம் சென்று எளிய வகையில் – சுலபமான முறையில் நேரடியாக தங்களுடைய கருத்துகளைச் சொல்ல முடியும்! அந்த நடைப்பயணத்தின் தேவை குறித்தும் – அதிலுள்ள நியாயங்கள் குறித்தும் மக்கள் பேசத் தொடங்குவார்கள். மக்கள் பேச பேசதான், அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்!

திராவிட இயக்க மேடைகளிலும் – நாடாளுமன்றத்திலும், தமிழ்நாட்டுக்காக - தமிழர்களுக்காக - அவர்களின் உரிமைகளுக்காக கர்ஜித்த அண்ணன் வைகோ அவர்கள், முதுமையை முற்றிலுமாகத் தூக்கி எறிந்துவிட்டு இந்த நடைப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.

நாட்டில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், ஆதி திராவிடர்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று அனைவரும் அச்சத்தில் வாழும் ஒரு நிலைமை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இப்போது அண்மையில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. அந்தச் சமயத்தில் நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும். சில ஆண்டுகளுக்கு முன்னர், நம்முடைய நாட்டில் இந்த நிலைமை இருந்ததா? இப்போது அண்மையில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. அந்தச் சமயத்தில் நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும். சில ஆண்டுகளுக்கு முன்னர், நம்முடைய நாட்டில் இந்த நிலைமை இருந்ததா?

உங்களின் நோக்கம் பெரிது என்றாலும், உங்களின் உடல்நலனும் எங்களுக்குப் பெரிது. எனவே, இந்தப் பயணத்தை நீங்கள் கவனமாக மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, இதுமாதிரியான கடுமையான நடைப்பயணங்களை இனி நீங்கள் மேற்கொள்ளக் கூடாது என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள். நீங்கள் கட்டளையிட்டால் அதைச் செய்வதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள். அதனால்தான் அந்த உரிமையோடு கேட்கிறேன்” என்று பேசினார்.