வரும் 15 ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சி கீழ் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய சமுதாய நலக்கூடம் மற்றும் வால்டாக்ஸ் சாலை அண்ணா பிள்ளை தெருவில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய சமுதாய நலக்கூடத்தினை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா பேசியதாவது, “திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து கல்விக்கும், மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக சென்னை துறைமுகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்ட வரும் சமுதாய நலக்கூடத்தை ஆய்வு மேற்கொண்டோம் என தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக இந்த இடம் நாடகக் கொட்டாய் இருந்தது, எம்ஜிஆர் காலத்தில் அதிகம் நாடகம் நடைபெற்ற பகுதியாக இருந்தது. அதற்கு பிறகாக பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு இந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி 14 கோடி மதிப்பீட்டில் சமுதாய நலக்கூட பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் எனவும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பாக 180 கோடியில் 16 சமுதாய நலக்கூடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதில் வடசென்னையில் மட்டும் 11 சமுதாய நலக்கூட பணிகள் நடைபெற்ற வருகிறது. அனைத்து இடங்களிலும் நடைபெற்று வரும் பணிகளும் முடிவுற்று விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு சமுதாய நலக்கூடங்கள் வரும் என தெரிவித்தார்.

சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு திட்டம் எப்பது தொங்கப்படும் என்ற கேள்விக்கு முதலமைச்சரின் சிறப்புமிக்கு திட்டமான தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை வரும் 15 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என கூறினார்.

வரும் 16 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் மழை பொழிவு இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது என்ற கேள்விக்கு இந்த மாதம் மழையை பொறுத்தவரை குறைவாக தான் பெய்துள்ளது. வரக்கூடிய நாட்களில் மழை இருக்கும் என தெரிவித்திருக்கிறார்கள். சென்னை மாநகராட்சியை பொறுத்த வரை ஆகஸ்ட் மாதம் முதல் மழைக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் எனவும் மழையை பொறுத்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.