கன்னியாகுமரி மாவட்டத்தில் அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் இன்று நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். உடன் மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 19-ஆவது கிறிஸ்துமஸ் விழா அருமனையில் நேற்றுத் தொடங்கியது. இதனையடுத்து அனைத்து திருச்சபைகளில் பாடல் குழுக்கள் பங்கேற்கும் பாடல் போட்டி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை மாலையில் நெடியசாலை சந்திப்பிலிருந்து நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி ஊர்வலம் நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து நெடுங்குளம் சந்திப்பில் சமூக நல்லிணக்கப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.
வட இந்திய திருச்சபையைச் சேர்ந்த வாரிஷ் கே.மஷி, கிறிஸ்துமஸ் சிறப்பு செய்தி வழங்குகிறார். கர்நாடக மாநில சிறுபான்மை ஆணைய துணைத் தலைவர் ராபர்ட் கிறிஸ்டோபர், எச். வசந்தகுமார் எம்எல்ஏ ஆகியோர் நலத் திட்ட உதவிகள் வழங்குகின்றனர்.
இதில் கன்னியாகுமரி மாவட்ட ஆயர்கள், போதகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கிறிஸ்தவ இயக்க செயலர் சி.ஸ்டீபன், தலைவர் என்.தேவராஜ் தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
