தமிழகத்தில் விரைவில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மலரும் என்றும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ தெரிவித்தார்.

திருச்சி மாவட்ட திமுகவின் செயற்குழு கூட்டம் தில்லைநகரில் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஸ்டாலின்குமார் (துறையூர்), சவுந்தரபாண்டியன் (லால்குடி) மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியது:

“மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1-ஆம் தேதி இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும். அப்போது மாணவ - மாணவிகளுக்கு உதவிகளை வழங்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றதும், ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இருந்தே இவர்கள் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்று தெரிகிறது.

சட்டசபையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தி.மு.க. யாருக்கும் ஆதரவு அளிக்க போவதில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரலாம், வராமலும் போகலாம். ஆனால் குறைவான எம்.எல்.ஏ.க்களை வைத்து சிறப்பாக ஆட்சி நடத்த தலைவர் கருணாநிதியால் மட்டும் தான் முடியும்.

இப்போது பொதுமக்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு நல்ல பெயர் இருக்கிறது. நமக்கு சாதகமான சூழ்நிலை உள்ளது. பொறுமையாக இருந்தால் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராவதை யாராலும் தடுக்க முடியாது.

தமிழ்நாட்டில் எந்த ஒரு மாவட்டத்திலும் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை. நிதி நெருக்கடியும் உள்ளது.

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இதற்காக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் தொகை அதிகமாகி விட்ட நிலையில், ஆண்டுக்கு ரூ.2 இலட்சம் கோடிக்கு பட்ஜெட் தயார் செய்ய வேண்டி உள்ளது.

நிதித்துறையை நிர்வகிக்க இரண்டு அமைச்சர்கள் வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி நிதித்துறை உள்பட 17 பொறுப்புகளை கையில் வைத்து இருக்கிறார்.

தற்போது நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்து, விலைவாசி பெருகிவிட்டது.

மத்திய அரசு சர்க்கரைக்கு வழங்கும் மானியத்தை நிறுத்தி விட்டது.

தமிழகத்தில் விரைவில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மலரும்” என்று அவர் பேசினார்.