சேலம்

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா குறித்த ஆலோசனை மாவட்ட நிர்வாகிகளிடம் நடத்த இன்று சேலம் வருகிறார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

தமிழக அரசின் சார்பில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மாவட்டந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழாக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக சென்று சிறப்பித்து வருகிறார். சேலம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அடுத்த மாதம் 30–ஆம் தேதி நடக்கிறது.

விழாவை சேலம் நேரு கலையரங்கில் விழா நடத்தலாமா? என்ற ஆலோசனை இருந்து வந்தது. தற்போது, சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வருகிற 8–ஆம் தேதி இந்த விழாவுக்கான கால்கோள் விழா நடத்தப்படுகிறது. விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் சேலம் மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திட சொந்த மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி இன்று இரவு வருகிறார். அதற்காக இன்று பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கிருந்து கார் மூலம் இரவு 10 மணிக்கு சேலம் வந்தடைகிறார்.

இரவில் சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள வீட்டில் அவர் ஓய்வெடுக்கிறார். நாளாய் காலை கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். பின்னர், அதிமுக பிரமுகர் இல்ல திருமணம் ஒன்றில் கலந்து கொள்கிறார். அதன்பின்னர் திருச்சி, புதுக்கோட்டையில் நடைபெறும் திருமண விழாக்களிலும் பங்கேற்க இருக்கிறாராம்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருவதையொட்டி மாவட்ட முழுவதும் காவலாளர்கள் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.