சென்னை, கோவை மாநகரங்களை வரும் 2020ம் ஆண்டுக்குள் ‘ஸ்மார்ட் சிட்டி’ மாற்றப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். 

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்துவது குறித்த ஒருங்கிணைந்த துறை அலுவலர்களுக்கு பயிற்சி பட்டறை தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:- 

இந்தியா முழுவதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 109 நகரங்களில், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் நோக்கத்துடன், மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம், சீர்மிகு நகரம் (Smart City) எனும் திட்டத்தை தொடங்கியது. 

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரது பரிந்துரையை ஏற்று, மத்திய அரசு தமிழகத்தில், 12 நகரங்களை சீர்மிகு நகரமாக மேம்படுத்த தேர்வு செய்தது. தமிழகத்தில் சீர்மிகு நகர திட்டத்தை செயல்படுத்த, 2015-16-ம் ஆண்டில், முதலாவதாக சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன. 

2வது ஆண்டில் மதுரை, சேலம், தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன. தற்போது திருச்சி, திருப்பூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாநகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாநகராட்சிகள் வரும் ஆண்டில் தேர்வு செய்யப்படும்.

சீர்மிகு நகரத்திட்டத்தை, 2015 முதல் 2020க்குள் 5 ஆண்டு காலத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு சீர்மிகு நகரத்திற்கும், மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் பங்கீடாக, முறையே ரூ.500 கோடி வழங்க இருக்கிறது.

இந்த திட்டத்தின் கீழ் நடப்பாண்டில், தி.நகர் பாண்டி பஜார் தியாகராய சாலையில், ரூ.20 கோடி மதிப்பில், பாதசாரிகள் வளாகம் அமைக்கப்படுகிறது. மேலும், தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை சந்திப்பில், ரூ.36 .5 கோடியில், பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும்.

பகுதி சார்ந்த வளர்ச்சி திட்டம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி முழுவதும் செயல்படுத்தும் திட்டத்திற்கு மொத்தம் ரூ.1,366.24 கோடியில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார்.