Chennai who transformed the boggle smoke Rail traffic in Chennai

சென்னை

போகி பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்களை நெருப்பில் கொளுத்தி வருவதால் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பனி மூட்டத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் தருவாயில் தற்போது புகைமூட்டமும் அதனோடு சேர்ந்துக் கொண்டுள்ளது..

பனி மற்றும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைவது இயல்பே. ஆனால், நடந்து செல்வோருக்கு கூட உடன் வருவது யாரென்று தெரியாத அளவுக்கு புகை மூட்டத்தின் அளவு இருக்கிறது..

போகி பண்டிகையால் ஏற்பட்டுள்ள புகை மூட்டத்தால் சென்னையின் விமான நிலையத்தில் அதிகாலை 4 மணி முதலே விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு இரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு வரவேண்டிய 19 விமானங்கள் ஐதராபாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன என்பதும், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் இன்னும் புறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..

அதுமட்டுமின்றி, சென்னையில் சூழ்ந்துள்ள புகைமூட்டத்தால் இரயில் சேவையும் வலுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதியில் புகைமூட்டம் காணப்படுவதால் சென்னை, அரக்கோணம் வழியாக செல்லும் அனைத்து இரயில்களும் அரை மணி நேரம் தாமதமாகி உள்ளன.

பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்களை எரித்து, காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு பிரச்சாரங்களை அரசு தரப்பில் இருந்து மேற்கொண்ட போதிலும் பல்வேறு பகுதிகளில் கையில் கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் அதன் விளைவு தெரியாமல் கொளுத்துகின்றனர் சிறுவர்கள்.

இதை பார்க்கையில் இந்த வருடமும் போதிய அளவு பிரச்சாரம் மேற்கொள்ளப்படவில்லையோ என்ற ஐயம் ஏற்படுகிறது.