சென்னை வியாசர்பாடியில் பழிக்குப் பழி வாங்கும் விதமாக ரவுடி ஒருவரை மர்ம கும்பல் ஒன்று ஓட,ஓட விரட்டி வெட்டியது. அங்கருந்த சிசிடிவி பதிவுகளைக் கொண்டு அந்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகரைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். 24 வயதான இவர் அப்பகுதியில் ரவுடியாக இருந்து வந்துள்ளார். இவர் மீது கொடுங்கையூர், வியாசர்பாடி, எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அரிகிருஷ்ணன், வியாசர்பாடி சாமியார்தோப்பு பகுதியில் தனது நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டு இருந்தார்.அப்போது திடீரென அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் முகத்தில் துணிகட்டியபடி வந்த 6 பேர் கொண்ட கும்பல் கையில் அரிவாள், கத்தியுடன் அரிகிருஷ்ணனை சுற்றி வளைத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உயிர் தப்பிக்க அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் கொலை வெறி கும்பல் அரிகிருஷ்ணனை விடாமல் அவரை பின்தொடர்ந்து ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் அவரது தலை, முகம், கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது.

பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த கொலை வெறி தாக்குதலை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ஏராளமானோர் திரண்டதால் மர்ம நபர்கள், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இச்சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த அரிகிருஷ்ணனை அப்பகுதி மக்கள்  மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரிகிருஷ்ணன் மீது பிரபல ரவுடியான பப்லுவை ஆந்திராவில் வைத்து கொலை செய்த வழக்கு உள்ளது. இதனால் பப்லுவின் கூட்டாளிகள், அரிகிருஷ்ணனை கொலை செய்ய திட்டமிட்டு பழிக்குப்பழியாக அவரை ஓட ஓட விரட்டி வெட்டி இருப்பது விசாரணையில் தெரிந்தது.

இது குறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரவுடி அரிகிருஷ்ணனை மர்ம கும்பல் அரிவாளுடன் விரட்டிச்செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து 6 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.