chennai silks fire accident

சென்னை சிலக்ஸ் கட்டடத்தின் முன் பகுதியில், இன்று காலை தீ மீண்டும் கொளுந்து விட்டு எரிந்தது. 30 நிமிட போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டாலும், உட்பகுதியில் தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து 28 மணி நேரமாக தீ எரிந்து கொண்டிருப்பதால் தியாகராய நகர் பகுதி முழுவதும் கடும் புகை மூட்டமாக காணப்படுகிறது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

சென்னை, தி.நகர், உஸ்மான் சாலையில், ஏழு மாடிகள் கொண்ட பிரபல ஜவுளி நிறுவனமான, சென்னை சிலக்ஸ் கட்டடத்தில், நேற்று அதிகாலை, தீ விபத்து ஏற்பட்டது. நேற்று முழுவதும் போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை 3.20 மணியளவில் கட்டடத்தின் வலது புறத்தின் ஒரு பகுதியில் 7 ம் தளம் முதல் 2ம் தளம் வரை திடீர் என இடிந்து விழுந்தது. 


இதனை தொடர்ந்து இடிந்து விழுந்த பகுதியில் சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின் அவர் தெரிவிக்கையில், ‛ஆய்வுக்கு பின் இடிந்து விழுந்து கட்டடத்திற்கு அருகே உள்ள கட்டடங்களுக்கு பாதிப்பில்லை. இடிந்த நிலையில் உள்ள மீதி கட்டடத்தை இடிப்பது குறித்து பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தியபின் முடிவு எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை கட்டத்தின் முன்பகுதியில் உள்ள பைபர் கண்ணாடியில் திடீரென தீ பிடித்தது. இந்த தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் 30 நிமிடங்களுக்கு பின்பு இந்த தீ கட்டுக்குள் வந்தது. தற்போது கட்டடத்தின் உட்பகுதி எரிந்து வருகிறது.

கட்டடத்தின் முன்பகுதியில் உள்ள அலங்கார வளைவுகள் இடிந்து விழுந்து வருகின்றன.