சென்னையில் வாகன சோதனையின்போது இளைஞரைத் தாக்கிய எஸ்.ஐ. ஒருவரை சஸ்பெண்டு செய்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், பாதிக்கப்ப்ட்ட இளைஞரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதே நேரத்தில் ரயிலில் இருந்து இறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணிப் பெண் ஒருவரை தங்களது முதுகுகளை படிக்கட்டுகளாக்கி இறங்க உதவி செய்த காவலர்கள் இருவரை ஆணையர் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனின் இந்த செயல்பாடுகளை பொது மக்கள் மனம் திறந்து பாராட்டி வருகின்றனர்.

சென்னை சேத்துப்பட்டு பகுதியில், கடந்த 19ம் தேதி நடந்த வாகன சோதனையின் போது எஸ்ஐ இளையராஜா தாக்கியதில் முகமது ஆரூண் சேட் என்ற இளைஞர் காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து கேட்டறிந்த சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டு, பொதுமக்களிடம் அத்துமீறியதற்காக எஸ்ஐ இளையராஜாவை  சஸ்பெண்டு செய்தார்.. 

இந்நிலையில் காயமடைந்த இளைஞர் முகமது ஆருண் சேட்டை அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்து, இனி இது போல் நடக்காமல் தடுக்க  வருங்காலங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். 

காவலரால் தாக்கப்பட்ட இளைஞர் காவலர்களை விரோதியாக பார்க்கும் சூழல் தொடரக்கூடாதென காவல் ஆணனையர் பாதிக்கப்பட்டவரை சந்தித்து நெகிழ்ச்சியாக அமைந்தது.

இதே போன்ற நேற்று முன்தினம் கோட்டை மற்றும் பூங்கா ரயில் நிலையங்களுக்கிடையே  மினசார ரயில் ஒன்று பழுதாகி நின்றது. அதில் இருந்த அனைவரும் குதித்து சென்றுவிட்ட நிலையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் ரயிலில் இருந்து இறங்க முடியாமல் தவித்தார்.

அப்போது அங்கு பணியில் இருந்த தனசேகரன், மணிகண்டன்  என்ற இரு காவலர்கள் நுழைவு வாயிலில் ஒருவர் அருகில் மற்றொருவர்  படிக்கட்டு போல குனிந்து நிற்க அவர்கள் முதுகுகளின் மேல் கால் வைத்து படிக்கட்டில் இறங்குவது போல்  அந்தப் பெண்ணை ரயிலில் இருந்து இறக்கிவிட்டனர்.

காவலர்களின் இந்த மனிதாபிமானமிக்க செயலை லட்சக்கணக்கானோர் சமூக வலைதளங்கள் மூலம் பாராட்டினர். இந்த சம்பவம் குறித்தும் கேள்விப்பட்ட மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், அந்த காவலர்கள் இருவரையும் நேரில் அழைத்துப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல் பரிசுகள் வழங்கியும் கௌரவித்தார்.

தவறு செய்யும் காவலர்கள் மீது எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் தண்டிக்கும் காவல் துறை ஆணையர் விஸ்வநாதன், அதே நேரத்தில் பொது மக்களுக்கு உதவி செய்யும் காவலர்களை நேரில் அழைத்துப் பாராட்டத் தவறுவதும் இல்லை..

ஏ.கே.விஸ்வநாதனின் இந்த மனிதாபிமானமிக்க செயல், பொது மக்களை மதிக்கும் பாங்கு என அவரை மக்கள் மனதில் உச்சத்தில் கொண்டுபோய் வைத்துள்ளது.