Metro : சென்னை.. விறுவிறுப்பாக நடக்கும் மெட்ரோ பணிகள்.. போக்குவரத்தில் மாற்றம் - எந்த பகுதியில் தெரியுமா?
Chennai Metro : இந்திய அளவில் சிறந்த மெட்ரோ ரயில் சேவைகளில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றது தமிழகத்தின் தலைநகரான சென்னையில் செயல்படும் மெட்ரோ. இந்நிலையில் புதிய வழித்தடங்கள் அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
மெட்ரோ ரயில் சேவைகள் என்பது இந்தியாவிற்கு புதிதல்ல, கடந்த 1984ம் ஆண்டு முதல் இந்தியாவில் மெட்ரோ ரயில் சேவைகள் செயல்பட்டு வருகிறது. முதல் முதலில் கொல்கத்தாவில் தான் இந்த ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சூழலில் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி முதல் CMRL எனப்படும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் தனது சேவைகளை துவங்கியது.
முதல் முதலில் இந்த சேவை தொடங்கப்பட்ட பொழுது வெறும் 9 கிலோமீட்டர் நீளம் கொண்ட பயணமாக தான் இது ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி அது 54 கிலோ மீட்டர் கொண்ட மெட்ரோ ரயில் சேவையாக அறிமுகம் செய்யப்பட்டது. தற்பொழுது சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தொடங்கி விம்கோ நகர் டெப்போ வரை மெட்ரோ ரயில் சேவைகள் அளிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல சென்ட் தாமஸ் மவுண்ட் தொடங்கி விண்கோ நகர் வரை தனியான ஒரு வழித்தடமும் செயல்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் மாதவரம் பால் காலனி முதல் சிறுசேரி சிப்காட் 2 வரை, சுமார் 45 கிலோமீட்டர் நீளம் கொண்ட, 47 நிறுத்தங்கள் கொண்ட மெட்ரோ பாதை தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.
அதைப் போல பூந்தமல்லி பைபாஸிலிருந்து, லைட் ஹவுஸ் வரை சுமார் 27 நிறுத்தங்கள் கொண்ட, 26 கிலோமீட்டர் நீள பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மாதவரம் பால் காலனி முதல் சோளிங்கநல்லூர் வரை செயல்படும் சுமார் 44 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 45 நிறுத்தங்கள் கொண்ட புதிய வழி தடம் அமைக்கப்பட்டு வருகிறது மெட்ரோ.
போக்குவரத்துக்கு மாற்றம்
மெட்ரோ ரயில்கள் அமைக்கும் பணி காரணமாக சென்னையின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக போக்குவரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. ஆகையால் ராயப்பேட்டை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஆர்.கே சாலை, டிடிகே சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பாலம் இடிக்கும் பணி நடைபெறுவதால் ஆறு நாட்கள் இரவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Chennai Metro : தொழில்நுட்பக் கோளாறு.. ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற முடியாது - CMRL முக்கிய அறிவிப்பு!