Asianet News TamilAsianet News Tamil

இதை செய்யும் விளையாட்டு சங்கம் தடை செய்யப்படும்... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!

தகுதியற்ற விளையாட்டு வீரர்கள் யாரேனும் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள் என தெரியவந்தால், சம்பந்தப்பட்ட சங்கத்தை 2 ஆண்டுகளுக்கு தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

chennai highcourt warns sports association
Author
Chennai, First Published Jan 19, 2022, 7:02 PM IST

தகுதியற்ற விளையாட்டு வீரர்கள் யாரேனும் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள் என தெரியவந்தால், சம்பந்தப்பட்ட சங்கத்தை 2 ஆண்டுகளுக்கு தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் தன்னை அனுமதிக்கவில்லை எனக் கூறி வட்டெறிதல் வீராங்கனை நித்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தன் மனுவில், மாவட்ட, மாநில, தேசிய அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பவர்களின் பதிவை ஆன்லைன் மூலமாக மேற்கொள்ள வேண்டும், தேசிய விளையாட்டு மேம்பாட்டு விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும், தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருந்தார்.

chennai highcourt warns sports association

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், இதுபோன்ற விளையாட்டு சங்கங்களை முறைப்படுத்த எந்த ஒரு சட்டமும் இல்லை என்றும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய இந்த விளையாட்டு சங்கங்களை முறைப்படுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஒவ்வொரு விளையாட்டு சங்கத்தின் செயல்பாடுகளையும் முறைப்படுத்துவதற்கான சட்டவிதிகளை வகுப்பது குறித்து மாநில அரசு பரிசீலிக்க வேண்டுமெனவும், அவற்றை அரசிடம் பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற சங்கங்களின் உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள், சங்கங்களின் நிதிநிலை உள்ளிட்ட விபரங்களை மாநில அரசிடம் வழங்குவதை கட்டாயமாக்க வேண்டுமெனவும், தகுதியான விளையாட்டு வீரர்களை தேசிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்பாதது குறித்து புகார் அளிக்க ஏதுவாக தனி குறைதீர் பிரிவை ஏற்படுத்த வேண்டுமென்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். விளையாட்டு சங்கங்கள் அமைப்புகளில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் விளையாட்டு வீரர்களாக இருத்தல் வேண்டுமெனவும், குறைந்தபட்சம் 75 சதவீதம் உறுப்பினர்கள் விளையாட்டு வீரர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

chennai highcourt warns sports association

விளையாட்டு சங்கங்களுக்கு நிதி உதவி வழங்கினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்களுக்கு நிர்வாகிகள் பதவிகள் வழங்கக் கூடாது என்றும், மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கான பதிவை ஆன்லைன் மூலம் மேற்கொள்வதோடு, இந்த விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை, செலவிடப்பட்ட தொகை ஆகியவற்றையும் ஆன்-லைனில் வெளியிட வேண்டுமென விளையாட்டு சங்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு விளையாட்டு சங்கமும் தனித் தனியாக இணையதளம் ஆரம்பித்து, சங்கத்திற்கு வந்த நிதியுதவி குறித்த விவரங்களை ஆன்-லைனில் வெளியிட வேண்டும் எனவும், தகுதியற்ற விளையாட்டு வீரர்கள் யாரேனும் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள் என தெரியவந்தால், சம்பந்தப்பட்ட சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளை நீதிபதி மகாதேவன் பிறப்பித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios