- Home
- Tamil Nadu News
- கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிபதி கேட்ட ஒற்றை கேள்வி.. பதறிய சிபிசிஐடி!
கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிபதி கேட்ட ஒற்றை கேள்வி.. பதறிய சிபிசிஐடி!
Kodanad Case: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை முடிக்காமல் இருப்பது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பியதை அடுத்து வழக்கு ஒத்திவைப்பு.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த பயங்கர கொள்ளை சம்பவத்தில் காவலாளி ஓம் பகதூர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி படுகாயமடைந்தார்.
இது தொடர்பான வழக்கில் சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை முதலில் தனிப்படை போலீசார் விசாரித்த நிலையில் தற்போது சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் உள்பட ஏராளமானோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
இது தொடர்பான வழக்கு ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற நீதிபதி முரளிதரன் இந்த வழக்கை இன்று விசாரித்தார். அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வளையார் மனோஜ் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினார். அரசு தரப்பில் சிறப்பு வழக்கிறஞர் கனகராஜ் மற்றும் சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான போலீசார் ஆஜராகினர்.
வழக்கு விசாரணையின் போது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்? என சிபிசிஐடி தரப்பில் கேள்வி எழுப்பினார். இதற்கு அரசு சார்பில் இந்த வழக்கு சிபிசிஐடி தரப்புக்கு மாற்றப்பட்டதில் இருந்து தற்போது வரை 269 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு தகவல்கள் வாக்கு மூலமாக பெறப்பட்டுள்ளன.
மேலும், சம்பவம் நடைபெற்ற சமயத்தில் சந்தேகிக்ககும் நபர்களின் செல்போன் உரையாடல் மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்த தரவுகள் தேவைப்படுகின்றன. இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து அறிக்கை கேட்கப்பட்டது. அந்த அறிக்கை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

