வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்புக்கும் வரை இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்திவைக்கக் கோரி பாமக முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்த மனு திரும்ப பெறப்பட்டதை அடுத்து, அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை 10.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் புதிதாக மாணவர் சேர்க்கையோ, பணி நியமனமோ நடைபெறக் கூடாது எனக் கூறி பிப். 15 மற்றும் பிப்.16 ஆகிய தேதிகளுக்கு வழக்கை தள்ளிவைத்துள்ளது.இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வரும் வரை, தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என பாமக முன்னாள் எம்எல்ஏ காவேரி வையாபுரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வரும் 15-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. எனவே, அதுவரை மாணவ சேர்க்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது நீதிபதி, வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் உயர் நீதிமன்றத்தில் ஏன் மனு தாக்கல் செய்தீர்கள் என கேள்வி எழுப்பினார். பின்னர், ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தார். இதனையடுத்து, மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.