செஸ் போட்டியில் மிக குறைந்த வயதில் கிராண்ட் மாமஸ்டர் பட்டம் வென்ற முதல் இந்திய சிறுவன் என்ற பெருமையை சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.

உலக அளவில் மிக குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 2-வது சிறுவன் எனும் பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். சிறுவன் பிரக்ஞானந்தா 12 வயது 10 மாதங்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இத்தாலியில், கிரிடைன் ஓபன் செஸ் போட்டியில் இறுதி சுற்றில் இத்தாலி வீரர் லூக்கா முரானியை வீழ்த்தி இந்த பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். பிரக்ஞானந்தா கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றதற்கு செஸ் சாம்பியன் விஸ்வநாத் ஆனந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, பிரக்ஞானந்தா, தனது விளையாட்டுத் திறமையால் என்னை ஈர்த்து விட்டார். அவரது வலிமையான விளையாட்டும், பொறுமையும் திறமையும் எதிர் வீரரை எளிதாக வீழ்த்தும் என கூறியுள்ளார்.

சிறுவன் பிரக்ஞானந்தா 10 வயது 9 மாதங்கள் இருக்கும்போது, சர்வதேச அளவில் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார். தற்போது 9 ஆம் வகுப்பு படிக்கும் பிரக்ஞானந்தா, சென்னையில் பாடியில் வசித்து வருகிறார். இவரது தந்தை பெயர் ரமேஷ். தாயார் நாகலட்சுமி, வைஷாலி என்ற சகோதரியும் இவருக்கு உள்ளார்.