மீஞ்சூரைச் சேர்ந்த பிரபல பாடி பில்டர் மணிகண்டன் வயிற்று வலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சென்னையை அடுத்த மீஞ்சூர் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரபல பாடி பில்டர் மணிகண்டன். இவர் இந்தியா முழுவதும் பல்வேறு ஆணழகன் போட்டியில் பங்கேற்று ஏராளமான பரிசுகளை வென்றுள்ளார். அப்பகுதியில் எம்கேஎம் உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வந்ததும் இல்லாமல் பயிற்சியாளராக இருந்து வந்தார்.

ஏராளமான இளைஞர்களை ஊக்கும் விக்கும் வகையில் பயிற்சிகளை கொடுத்து வந்துள்ளார். தான் கற்றுக் கொண்டதை இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுத்து தன்னை போல மிஸ்டர் இந்தியா போன்ற பட்டங்களை வெல்வதற்காக இளைஞர்களை தயார் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக, ஒப்பந்த பணி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களையும் செய்து வந்தார்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தார். இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் மாணவர்கள் நேரில் சென்று அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் சொந்த ஊரான மீஞ்சூரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. சம்பவத்தின் முந்தைய நாள் இரவு பிரியாணி கடை திறப்பு விழாவில் பங்கேற்று நள்ளிரவில் மணிகண்டன் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஆணழகன் போட்டிக்கு தயாரான போது நண்பர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஊக்கமருந்து அதிகமாக எடுத்துக்கொண்டதால் போட்டி நடந்த மேடையிலேயே மணிகண்டன் மயங்கி விழுந்ததும் அவரது தாயின் மூலம் தெரியவந்துள்ளது.