சென்னை அம்பத்தூரில் பேட்மிண்டன் பயிற்சியாளர் தினேஷ் பாபு கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்.

சென்னை அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (60). இவரது மகன் தினேஷ் பாபு (35). பேட்மிண்டன் பயிற்சியாளராக உள்ள இவர் கட்டிட காண்ட்ராக்ட் வேலையும் செய்து வந்தார். இந்நிலையில் அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகில் உள்ள பேட்மிண்டன் மையத்திற்கு தினேஷ் பாபு காலை, மாலை பயிற்சிக்கு வருவது வழக்கம். அதன்படி கடந்த 28ம் தேதி மாலை 4 மணியளவில் வீட்டிலிருந்து பேட்மிண்டன் பயிற்சி மையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியது. இதுகுறித்து அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் தினேஷ் பாபு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக 2 பேர் வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆட்டோவில் வந்து கொலையை செய்த கும்பல் இவர்கள் இல்லை என்பது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளின் வைத்து விசாரித்தபோது, நெல்லையைச் சேர்ந்த கூலிப்படைக்கு தொடர்ப்பு இருப்பது தெரியவந்தது.

இதனால் கொலையில் நேரடியாக ஈடுபட்ட திருநெல்வேலி வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜவேலு (31), பாளையங்கோட்டை செட்டிகுளத்தைச் சேர்ந்த யேசுராஜா (43), நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த பெருமாள் (42), கும்பகோணத்தைச் சேர்ந்த மணிகண்டன் (21), திருவள்ளூர் திருவேலங்காடு பகுதியைச் சேர்ந்த முகமது சுபீர் (21) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. பெண் விவகாரத்தில் கூலிப்படையை ஏவி தினேஷ் பாபு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. கொலையில் அதிமுக பிரமுகர் தனஞ்செயனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் கைது செய்யப்பட்ட பின்னரே பெண்ணின் உறவினர்களுக்கு உள்ள தொடர்பு தெரியவரும் என்று கூறப்படுகிறது.