சென்னையில் தொடர் மழை.. தேங்கி நிற்கும் தண்ணீர் - இன்று காலை 9 மணி வரை விமானநிலையம் மூடல் - புதிய அப்டேட்!
Chennai Airport Closed : நேற்று சென்னையில் பெய்த கனமழை காரணமாக நேற்று இரவு 11 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிலைமை சரியாகவில்லை என்பதால் புதிய அறிவிப்பை சென்னை விமானநிலையம் வெளியிட்டுள்ளது.
கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரிய மழைப்பொழிவை சென்னை பெற்றுள்ளது என்கின்ற தகவல் நாம் அறிந்த ஒன்று. நேற்று முழுவதும் சென்னையில் பல பகுதிகளில் மிதமானது முதல் மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல இடங்கள் வெள்ளைக்காடாக மாறிய நிலையில், பள்ளிக்கரணையில் வரிசையாக நின்று கொண்டிருந்த 10கும் மேற்பட்ட கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இன்று மிக்ஜாம் புயல் கரையை கடக்க உள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 8 அமைச்சர்களை வெள்ளம் பாதித்த இடங்களுக்கு ஆய்வு செய்ய அனுப்பியுள்ளார். மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களையும் அவர்களுக்கு உணவு வழங்குவதையும் உறுதி செய்ய அவர் ஆணையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
மக்களும் இந்த பேரிடர் காலத்தில் தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சுமார் 11 மணியளவில் மூடப்பட்ட சென்னை விமான நிலையம், நேற்று இரவு 11 மணிக்கு திறக்கப்படும் என்ற தகவலை சென்னை விமான நிலையம் வெளியிட்டிருந்தது.
இருப்பினும் தொடர் மழை காரணமாகவும், பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதாலும், விமானங்களை தொடர்ச்சியாக இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விமான ஓடுதளங்களில் தண்ணீர் இன்னும் முழுமையாக வடியாத நிலையில், இன்று காலை 9 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டு இருக்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சுமார் 30க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள காரணத்தினால் பல நூறு மக்கள் விமான நிலையத்திலேயே சிக்கித் தவித்து வருகின்றனர். தற்பொழுது சென்னை விமான நிலையம் அறிவித்துள்ள தகவலின்படி இன்று காலை 9 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டு இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.