வெளுத்து வாங்கும் ஃபெஞ்சல்; காலை வரை செயல்பாடுகளை நிறுத்தும் சென்னை ஏர்போர்ட்!
Chennai Airport : சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தன்னுடைய செயல்பாட்டுகளை இன்று மதியம் 12.30 மணிக்கு நிறுத்தியது.
தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையானது கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் துவங்கவிருந்த நிலையில், எதிர்பார்த்ததை விட 15 நாட்களுக்கு முன்னதாகவே அக்டோபர் மாதம் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியது. இருப்பினும் அப்போது பெரிய அளவில் மழையினால் பாதிப்புகள் ஏற்படவில்லை. சென்னை மக்களுக்கு இது மிகப்பெரிய நிம்மதியை அளித்த நிலையில் தற்பொழுது உருவாகி இருக்கும் ஃபெஞ்சல் புயல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. சென்னையின் பல இடங்களில் தண்ணீர் மூழ்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை பொறுத்தவரை டெல்டா மாவட்டங்களிலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் இன்று இரவு 11 மணி அளவில் இந்த ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக சூறைக்காற்றும் வீசி வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று அரசு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. 24 மணி நேரமும் தமிழக அரசு தயார் நிலையில் இருக்கிறது என்றும், உரிய பணிகளை செய்து வருவதாகவும் அரசு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஃபெஞ்சல் புயல்! மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு! எந்தெந்த மாவட்ட மக்களுக்கு தெரியுமா?
இந்த சூழலில் சென்னையில் மாறி உள்ள கடுமையான வானிலையின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் சென்னை விமான நிலைய செயல்பாடுகள் நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. மேலும் இன்று மாலை 7 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலையம் தனது இயல்பு நிலைக்கு திரும்பி, அதன் செயல்பாடுகளை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க துவங்கியுள்ள நிலையில் அதிகாலை வரை பலத்த மழையும், சூறைக்காற்றும் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தன்னுடைய செயல்பாடுகளை நாளை டிசம்பர் 1ம் தேதி அதிகாலை 4 மணி வரை நிறுத்தி வைப்பதாக தங்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சென்னை விமான நிலையம் அறிவித்திருக்கிறது. பயணிகள் அதற்கு தகுந்தாற்போல ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துகொள்ள அறிவுறுத்தியுள்ளது சென்னை விமான நிலைய நிர்வாகம்.
Fengal Cyclone: ஆட்டத்தை ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்! கரையை கடக்க எவ்வளவு நேரமாகும்? பரபரப்பு தகவல்!