எல்சா 3 கப்பல் விபத்தில் சிதறிய பிளாஸ்டிக் துகள்கள் தமிழகக் கடற்கரையில் கரை ஒதுங்கி வருகின்றன. தமிழக அரசு, பாதுகாப்பான முறையில் அவற்றை அப்புறப்படுத்தி, சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராய்ந்து வருகிறது.

தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் கடந்த 24.05.2025 அன்று கேரளா கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவில் எல்சா 3 என்ற கப்பல் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த எரிபொருள், பிளாஸ்டிக் துகள்கள், ஆபத்தான பொருட்கள் கொண்ட கன்டெய்னர்கள் கடலில் விழுந்தது. வலுவடைந்த தென்மேற்கு பருவ மழையின் காரணமாக பிளாஸ்டிக் துகள்கள். பெட்டகங்கள் உட்பட பிற பொருட்கள் கேரள மாநிலத்தின் கடற்கரையிலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையிலும் கரை ஒதுங்கி வருகிறது. 

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் தலைமையில் கடந்கரையில் ஒதுங்கும் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் பிற பொருட்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவது மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

28.05.2025 அன்று பிளாஸ்டிக் துகள்கள் கன்னியாகுமாரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையில் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்ட உடன் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்களுக்கும் மற்றும் தொடர்புடைய அனைத்து அரசு துறையினருக்கும் பிளாஸ்டிக் துகள்களை அப்புறப்படுத்துவதற்கான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் வழங்கப்பட்டது.

மேலும், இக்கூட்டத்தில் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் பெட்டகங்கள் வானிலை சூழலுக்கேற்ப நகரும் திசை மற்றும் கரை ஒதுங்கக்கூடிய பகுதிகள் குறித்து அறிவியல் வல்லுநர்களின் கருத்து கேட்டறியப்பட்டது. தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிளாஸ்டிக் துகள்களை அகற்ற தன்னார்வலர்கள் மூலம் பாதுகாப்பான முறையில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை ஒருங்கிணைத்து பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது என்றும், பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கும் மீனவர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, இந்நிகழ்வின் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த குறுகிய மற்றும் நீண்டகால ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் மூலமாக மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் மீதான தாக்கத்தினை கண்டறிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் பிளாஸ்டிக் துகள்கள். பெட்டகங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய பொருட்கள் கடலிலோ அல்லது கடற்கரையிலோ கண்டறியப்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல் துறைக்கும் தெரிவிக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி எவ்வித ஆபத்தான பொருட்களும் தமிழக கடற்கரையில் ஒதுங்கவில்லை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் தமிழக அரசு பொதுமக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்று தலைமைச் செயலாளர் தெரிவித்தார்